வருகிற மக்களவை தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காவிட்டால் அமைச்சர்கள் மீதான வழக்குகள் வெளியே வரும். மேலும் தம்பிதுரை ஒரு டுபாக்கூர் என டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். 

அரியலூர், பெரம்பலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தம்பிதுரை பேச்சு எல்லாம் டூபாக்கூர். முன்பு எம்.பி.,க்களுக்கு ஜெயலலிதாவிடம் இருந்து உத்தரவுகள் வரும். ஆனால், தற்போது, மோடியிடம் இருந்து வருகிறது. மக்களவை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி இல்லை என்றால் அமைச்சர்கள் மீதுள்ள வழக்குகள் தீபாவளி பட்டாசு போல பட படவென வெளியே வரும். 

மேலும் என்னை பார்த்து மு.க.ஸ்டாலின் ரூ.20 டோக்கன் என கூறுகிறார். அவர் ஆர்.கே.நகரில் டெப்பாசிட் வாங்காததால் நான் ஸ்டாலினை டெபாசிட் ஸ்டாலின் என அழைப்பேன். கரூரில் தி.மு.க.வினருக்கு ஆள் இல்லாததால் நம்ம செந்தில் பாலாஜியை மாவட்ட செயலாளராக தேர்வு செய்துள்ளனர். திருவாரூர் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்திடுவோமோ என்ற பயத்திலேயே ஸ்டாலின் மற்றும் எடப்பாடி திட்டம் போட்டே தள்ளி வைத்துள்ளனர்.

 

10 தலைகளை கொண்ட ராவணன் போல, பல கட்சிகளை கூட்டணி வைத்துக்கொண்டே தி.மு.க., பயப்படுகிறது. வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ள 18 தொகுதி இடைத்தேர்தலிலும் அமமுக அமோக வெற்றி பெறும் என்றார்.