நடைபெற உள்ள 2021 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவோர் குறித்து முடிவெடுக்க கழக ஆட்சிமன்றக் குழுவை  டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தற்போதே தயாராகிவிட்டன. திமுக, அதிமுக தரப்பில் தேர்தல் பணிகளுக்கான குழு அமைக்கப்பட்டுவிட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதற்கட்ட பிரச்சாரத்தை நாமக்கல் மாவட்டத்தில் தொடங்கி நடத்தி வருகிறார். திமுக தலைவர் ஸ்டாலின் மக்கள் கிராம சபை என்ற பெயரில் ஊரக பகுதிகளில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டார். கமல்ஹாசன் மூன்றாவது கட்டமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதிமுகவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த தினகரனின் அமமுக தரப்பில் தேர்தல் பணிகள் கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்து வருகிறது.

இந்நிலையில், இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- நடைபெற உள்ள 2021 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவோர் குறித்து முடிவெடுக்க கழக ஆட்சிமன்றக் குழு கீழ்காணுமாறு அமைக்கப்படுகிறது.

ஆட்சி மன்றக் குழுவின் தலைவராக தகுதி நீக்கம் செய்யப்பட்ட அரூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், குழுவின் உறுப்பினர்களாக முன்னாள் எம்.பி சுகுமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கோதண்டபானி, பாலசுப்பிரமணி, எம்.ஜி.ஆர் இளைஞரணிச் செயலாளர் டேவிட் அண்ணாதுரை, இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் செங்கோடி, செங்கல்பட்டு தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் நபில் ஆகியோரை டிடிவி. தினகரன் நியமித்துள்ளார். 2021 சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமமுக சார்பில் போட்டியிடுவோர் குறித்து முடிவெடுக்க இந்த ஆட்சி மன்றக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கியுள்ளார்.