அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வெற்றிவேலின் இல்லத்திற்குச் சென்று அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். 

கொரோனா தொற்று காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமமுக பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி கடந்த அக்டோபர் மாதம் 15ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய உடல் வாகனம் மூலம் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது. கொரோனாவால் இறந்ததால், வாகனத்தில் இருந்து உடல் கீழே எடுத்து வரப்படவில்லை. இதனால் பால்கனியில் இருந்தபடியே குடும்பத்தினர், வெற்றிவேல் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.  சி.ஆர். சரஸ்வதி உள்ளிட்ட அமமுக நிர்வாகிகள் சிலர் மட்டும் அஞ்சலி செலுத்த நேரில் வந்திருந்தனர்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேரில் வராதபோதும், ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வெற்றிவேல் படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர், டிடிவி.தினகரன் வெளியிட்ட இரங்கல் குறிப்பில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரும், எனது இனிய நண்பருமான வெற்றிவேல் மறைந்தார் என்ற செய்தியை நம்ப முடியாமல் தவிக்கிறேன்.  மிகுந்த வேதனையும் சொல்ல முடியாத துயரமும் என் தொண்டையை அடைக்கிறது. ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோரின் பேரன்பைப் பெற்றவர்.

என் மீது அளவிட முடியாத பாசம் கொண்டவர். எதையும் உரிமையோடு பளிச்சென பேசுபவர்.  'வெற்றி... வெற்றி' என வாய் நிறைய அழைத்து இனி யாரிடம் பேசப்போகிறோம் என்று நினைக்கிறபோதே எதற்காகவும் கலங்காத என் உள்ளம் கலங்கித் தவிக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வெற்றிவேலின் இல்லத்திற்குச் சென்று அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.