TTV Dhinakaran is egg!Minister Jayakumar Interview

சத்துணவு முட்டையை வருமான வரித்துறை சோதனையுடன் ஒப்பிட்டு பேசும் டி.டி.வி தினகரன் ஒரு கூமுட்டை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக பேட்டி அளித்துள்ளார். கோவையில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய டி.டி.வி தினகரன், ஆளும் அ.தி.மு.க அரசுக்கு முட்டை மூலமாக வெடிகுண்டு வந்திருப்பதாக கூறினார். இந்த முட்டை வெடிகுண்டு வெடித்து விரைவில் ஆட்சி கவிழும் என்கிற ரீதியில் தினகரன் பேசியிருந்தார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ஜெயக்குமார் அளித்த பதில் பின்வருமாறு:- பொழுது விடிந்து பொழுது சாய்ந்தால் ஆட்சி கவிழும் என்று கூறுவதே தினகரனுக்கு வாடிக்கையாகிவிட்டது. கடந்த ஓராண்டாகவே ஆட்சி இன்று கவிழும், நாளை கவிழும் என்று தினகரன் புலம்பிக் கொண்டிருக்கிறார். அவரால் நிச்சயம் இந்த ஆட்சியை ஒன்றும் செய்ய முடியாது. தமிழக அரசுக்கு முட்டை சப்ளை செய்யும் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்த புகாரில் வருமான வரித்துறை சோதனை நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கு தமிழக அரசு என்ன செய்ய முடியும்? சரியான விலையில் சரியான தரத்தில் அந்த நிறுவனத்திடம் இருந்து தமிழக அரசு முட்டையை கொள்முதல் செய்துள்ளது. எனவே வருமான வரித்துறையின் சோதனையை முட்டையுடன் தொடர்பு படுத்தி பேசும் தினகரன் ஒரு கூமுட்டையாகத்தான் இருக்க முடியும். இவ்வாறு ஜெயக்குமார் பேசினார்.