முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தும் ஆளுநர்! தமிழக அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்த டிடிவி
தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய முக்கியமான சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி ஆளுநர் மாளிகை அரசுக்கு திருப்பி அனுப்புவதும், விளக்கம் கொடுத்த பின்னும் பலமாதங்களாக சட்டங்கள் கிடப்பில் போட்டிருப்பதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
தொடரும் ஆன்லைன் தற்கொலைகள்
ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனையடுத்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதற்கு அதிமுக ஆட்சியில் இருந்த போது தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததையடுத்து திமுக ஆட்சி அமைந்ததும் மீண்டும் சட்டம் இயற்றப்பட்டது ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. தற்போது வரை அந்த சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் கொடுக்காத நிலை நீடித்து வருகிறது. இந்தநிலையில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து கடந்த 3 தினங்களில் மட்டும் 2 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூரையடுத்த உடையார்பாளையத்தைச் சேர்ந்த பிரபு என்ற கூலித்தொழிலாளி ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்
இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த மூவர் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய முக்கியமான சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி ஆளுநர் மாளிகை அரசுக்கு திருப்பி அனுப்புவதும், விளக்கம் கொடுத்த பின்னும் பலமாதங்களாக சட்டங்கள் கிடப்பில் போட்டிருப்பதுமாக நடவடிக்கைகள் உள்ளன. இப்போது மேலும் மூன்று பேர் உயிரிழப்பது வரை தாமதம் நேர்ந்திருப்பது வேதனை அளிக்கிறது. எனவே, இனிமேலும் தாமதிக்காது ஆன்லைன் ரம்மி சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்துவதாக டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படியுங்கள்