துரோக சக்திகளுக்கு நாடாளுமன்ற தேர்தலில் பதிலடி கொடுப்போம்..! இபிஎஸ்யை அலறவிடும் டிடிவி தினகரன்
துரோக சக்திகளுக்கும், தீய சக்திகளுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் நம் கழக கண்மணிகள் அயராது உழைப்பைக் கொடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாடுவது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலளார் டிடிவி தினகரன் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 75ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள நமது கழக நிர்வாகிகள் மக்களுக்கு அன்னதானம் வழங்கியும், ஏழை- எளியோர் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு உதவிகள் வழங்கியும், கிராமம் முதல் மாநகரம் வரை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடியினை ஏற்றிச் சிறப்போடு கொண்டாட வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
நாடாளுமன்ற தேர்தலில் பதிலடி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என்று முடிவு எடுத்ததை விமர்சிக்கும் துரோக சக்திகளுக்கும், தீய சக்திகளுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் நம் கழக கண்மணிகள் அயராது உழைப்பைக் கொடுக்க வேண்டும். அதற்கான உறுதியை நாம் ஏற்கும் நாளாக இதயதெய்வம் அம்மாவின் பிறந்த நாள் அமைய வேண்டும் என்று விரும்புகின்றேன். புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவி அம்மா அவர்களும் கட்டியெழுப்பிய கட்சியைப் பாதுகாக்க நினைக்காமல், செய்த தவறுகளிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள தீய சக்திகளோடு துரோக சக்திகள் திரைமறைவில் தொடர்பிலுள்ளனர் என்பதை உலகம் அறிந்து சிரிக்கிறது.
நேசக்கரம் நீட்டியது தவறு
ஒவ்வொரு கட்டத்திலும் சோதனைகள், நெருக்கடிகள் இவையனைத்தையும் கடந்துதான் நாம் நடைபோட்டு வருகிறோம். மாண்புமிகு அம்மா அவர்களின் பவளவிழா ஆண்டில் மார்ச் 15ஆம் தேதி அன்று கழகம் 6ஆவது அகவை காண்கிறது. இந்த இருபெரும் விழாக்களையும் பட்டிதொட்டியெங்கும் கொண்டாடிடுவோம். நமக்கெதிராய் இழைக்கப்பட்ட துரோகங்கள் அனைத்தையும் மறந்து மீண்டும் நம் அம்மா அவர்களின் ஆட்சி அமைய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டு நாம் நீட்டிய நேசக்கரத்தை சிலர் ஆணவம் காரணமாக அலட்சியம் செய்து, நம்மை குறைத்து மதிப்பட்டதன் விளைவு, தமிழகத்தில் தீய தி.மு.க.வின் ஆட்சி அமைந்துவிட்டது. தற்போது, அந்த தீய ஆட்சி வழக்கமான தனது கொடூர பாணியை வெளிக்காட்டுகிறது.
மக்களை வஞ்சிக்கும் திமுக
கொடுத்த வாக்குறுதிகளை மறந்து விட்டு, மக்கள் தலையில் அடுத்தடுத்து கட்டணம் மற்றும் வரிச்சுமைகளையேற்றி அனைத்துத் தரப்பு மக்களையும் தி.மு.க அரசு வஞ்சித்து வருகிறது. பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள், போதைப்பொருள் கலாச்சாரம், அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள் என்று அடுத்தடுத்து சமூக தீமைகள் அரங்கேறி வருகின்றன. இவற்றைத் தடுத்திடும் பொறுப்பும் கடமையும் நமக்கு உள்ளது. தமிழகம் தலை நிமிர்ந்திடவும், தமிழர் வாழ்வு மலர்ந்திடவும் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும், அதன் பின்னர் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் நிச்சயம் வெற்றி முத்திரையைப் பதிக்கும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்