பலவீனப்பட்டு வரும் அதிமுக..! வழக்குகளுக்கு பயந்து தீய சக்திகளிடம் சமரசம் செய்த துரோகிகள்-டிடிவி தினகரன் ஆவேசம்
ஆட்சி அதிகாரத்தை இழந்து, அதிமுக தொடர்ந்து பலவீனப்பட்டு வருவதைப் பற்றி துளியும் கவலைப்படாமல் துரோக சக்தியின் கூட்டம் வழக்குகளிலிருந்து தப்பித்துக்கொள்ள தீயசக்திகளிடம் சமரசம் அடைவது கண்கூடாக தெரிகிறது என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
தியாகம் ஒரு போதும் வீணாகாது
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் 6 ஆம் ஆண்டு விழாவையொட்டி கழக தொண்டர்களுக்கு டிடிவி தினகரன் கடிதம் எழுதியுள்ளார். அதில், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரால் கட்டிக்காக்கப்பட்ட கழகம், துரோகத்தின் கையில் சிக்குண்ட காரணத்தால் வீருகொண்டெழுந்த லட்சக்கணக்கான தொண்டர்களின் எழுச்சிமிகு எண்ணத்தின் வெளிப்பாடே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம். கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி மதுரை மாவட்டம் மேலூரில் லட்சோப லட்சம் அன்பு தொண்டர்கள் மத்தியில் தொடங்கப்பட்டது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பலமே அதன் தீரமும், வீரமும் நிறைந்த தொண்டர்கள்தான் என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். கொள்கைப் பிடிப்புக்கொண்ட அவர்களின் எண்ணமும், தியாகச் செயலும் ஒருபோதும் வீணாகாது. தொண்டர்களின் பேராதாவுடன்தான் பல களங்களைச் சந்தித்தோம்.
ஆளுங்கட்சியை வீழ்த்தியுள்ளோம்
ஆர்.கே.நகரில் ஆண்ட கட்சியையும், ஆளுங்கட்சியையும் வீழ்த்தினோம். 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும், 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களில் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்றோம். ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களிலும் சிறப்புக்குரிய வெற்றிகளை நாம் ஈட்டினோம். தமிழகத்தின் உரிமைகளுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் ஆண்ட கட்சியையும், ஆளும் கட்சியையும் எதிர்த்து நடத்தியுள்ளோம். பல போராட்டங்களை தமிழகம் முழுவதும் தொடர்ந்து தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தனிமுத்திரை பதித்து வரும் நிலையில், நாம் 6ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். துரோகிகளின் ஆட்சியிலும், தற்போது தீயவர்களின் ஆட்சியிலும் அனைத்துத் தரப்பு மக்களும் சொல்லெண்ணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
தேர்தல் பணிகளை தொடங்கிடுக
தற்போது தீயவர்களின் ஆட்சியில் அச்சுறுத்தப்படும் வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எப்போதும் நாம் பாதுகாப்பாக இருந்திட வேண்டும். மேலும், ஏழை, எளிய மக்களுக்கு குடிநீர், சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படை வசதிகள் குறைவின்றி கிடைக்கவும் அவர்களின் கோரிக்கைகளை வென்றெடுப்பதிலும், தேவையெனில் மக்களுக்காக களம் இறங்கி போராட்டங்களிலும் ஈடுபட வேண்டும். சகோதர நேசத்தையும், மத நல்லிணக்கத்தையும் நம் தலைவர்களின் வழி நின்று என்றும் முன்னெடுத்திடுவோம். வரவிருக்கின்ற நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற பொதுத்தேர்தல் பணிகளை நிர்வாகிகள் இப்போதில் இருந்தே தொடங்க வேண்டும். தமிழகம் மீட்க வேண்டிய உரிமைகளையும், மத்திய அரசிடமிருந்து பெறவேண்டிய நலன்களையும், மாநில உரிமைகளையும் பெற்றிட, அம்மாவின் உண்மையான தொண்டர்களின் இயக்கமான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தால்தான் முடியும் என்ற நமது பரப்புரையை நாம் மேற்கொள்ளவேண்டும்.
தீய சக்திகளிடம் சமரசம்
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட கழகம், அம்மா அவர்கள் கொடுத்துச்சென்ற ஆட்சி அதிகாரத்தை இழந்து, தொடர்ந்து பலவீனப்பட்டு வருவதைப் பற்றி துளியும் கவலைப்படாமல் துரோக சக்தியின் கூட்டம் வழக்குகளிலிருந்து தப்பித்துக்கொள்ள தீயசக்திகளிடம் சமரசம் அடைவது கண்கூடாக தெரிகிறது. துரோகிகளும், தீயசக்திகளும் வீழ்த்தபடவேண்டும் என்பதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உறுதியோடு இருக்கிறது. அதேசமயத்தில், அம்மாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஓர் அணியாய் நின்று போராட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன்.
தீய சக்தியை வீழ்த்துவோம்
தீயசக்தி தி.மு.கவை வீழ்த்தியே ஆகவேண்டும். தமிழக மக்கள் நலனுக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் நாம் எப்போதும் பாடுபடவேண்டும். மாண்புமிகு அம்மாவின் உண்மையான ஆட்சியை அமைக்கவேண்டும். இதனை நிறைவேற்றியே தீருவோம் என்பதே நமது இயக்கத்தின் ஆறாம் ஆண்டு துவக்க விழாவில் நாம் எடுக்கும் உறுதிமொழியாகும். சோதனைகளும், சவால்களும் நமது பயணத்தை ஒரு போதும் தடுத்திட முடியாது. "எதிர்காலம் வரும், நம் கடமை வரும்". என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
எடப்பாடி பழனிசாமி அரசியல் அநாதையாகி விடுவார்... செல்வ பெருந்தகை சாடல்!!