எடப்பாடி பழனிசாமி அரசியல் அநாதையாகி விடுவார்... செல்வ பெருந்தகை சாடல்!!
எடப்பாடி பழனிசாமியை சொந்தக் கட்சியினரே விட்டு விலகி, அவர் அரசியல் அநாதையாகி விடுவார் என்று சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியை சொந்தக் கட்சியினரே விட்டு விலகி, அவர் அரசியல் அநாதையாகி விடுவார் என்று சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகங்கையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசிய போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து நாவடக்கம் இன்றி விமர்சனம் செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அவரது பேச்சு அநாகரிகத்தின் உச்சம். மேலும், அனைவரையும் முகம் சுளிக்க வைக்கும் வகையில் உள்ளது. வக்கிர குணம் கொண்ட ஒருவரால்தான் இவ்வாறு பேசுமுடியும். தமிழ்நாட்டை ஆட்சி செய்த முதலமைச்சர்களில் இவ்வளவு தரம் தாழ்ந்து, அரசியல் நாகரிகம் இல்லாமல் பேசும் முதலமைச்சரை தமிழ்நாடு பார்த்ததில்லை.
இதையும் படிங்க: திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறது... அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் குற்றச்சாட்டு!!
ஒரு எதிர்கட்சி தலைவராக இருந்து கொண்டு அவர் பேசும் பேச்சுகளில் கவனம் வேண்டாமா? தமிழ்நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவருக்கு நாளுக்குநாள் மக்கள் செல்வாக்கு பெருகிக் கொண்டிருப்பதைப் பொறுத்துக் கொள்ளமுடியாமல் நிலைகுலைந்து போய், அரசியல் முதிர்ச்சியின்றி எடப்பாடி பழனிசாமி இப்படிப் பேசி வருகிறார். சமீபகாலமாக திரு எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சுகள், கண்ணியமான தமிழ்நாட்டின் அரசியல் நாகரீகத்திற்கு, இழுக்கு வந்துவிடும் போலிருக்கிறது.
இதையும் படிங்க: நாவடக்கத்தோடு அரசியல் செய்யுங்கள்... அதிமுகவை சாடும் நாராயணன் திருப்பதி!!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி பேசிய தரம் குறைந்த பேச்சுக்கு, அந்தத் தொகுதி மக்கள் அவருக்கு தகுந்த பதிலடி கொடுத்து, மிக மோசமாக அவரது கட்சியினரை தோற்கடிக்க வைத்தார்கள். அதிலிருந்து அவர் பாடம் கற்றதாகத் தெரியவில்லை. இதேபோன்று வரும் காலங்களில் பேசினால் அவருக்கு தமிழ்நாட்டு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். மேலும், சொந்தக் கட்சியினரே அவரை விட்டு விலகி, அவர் அரசியல் அநாதையாகி விடுவார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.