ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்ட என்னை ஏன் ஓ.பி.எஸ். சந்திக்க வேண்டும் என்றும் என்னை சந்தித்ததை அவரே ஒப்புக் கொண்டு விட்டார் என்றும் தற்போது அவர் தனிமனிதராகி விட்டதாகவும் டிடிவி தினகரன் கூறினார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன், திகார் சிறையில் தான் வந்த பிறகு, ஓ.பன்னீர்செல்வம் தன்னை சந்தித்ததாகவும், அரசியல் காரணங்களுக்காக இதுவரை நான் வெளியில் சொல்லாமல் இருந்தேன் என்று கூறியிருந்தார். மேலும் எனக்கு முக்கியமான பதவியை கொடுக்க தயாராக இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தூது விட்டார் என்று ஓ.பன்னீர்செல்வம் குறித்து பரபரப்பு புகார் கூறியிருந்தார்.

தினகரனின் இந்த பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில், தினகரனை தான் சந்தித்தது உண்மைதான். தினகரன் பொய்க்குமேல் பொய் சொல்லி வருகிறார்; அரசியல் நாகரீகம் தெரியாத அநாகரீகமானவர் என்றும் துணை முதலமைச்சர் கூறியிருந்தார்.

தினகரன் - துணை முதலமைச்சர் விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், பெங்களூர் பரப்பன அக்ரஹாரத்தில் இருக்கும் சசிகலாவை, தினகரன் இன்று சந்தித்தார். சசிகலாவை சந்தித்த பிறகு, டிடிவி தினகரன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், என்னை ஏன் ஓ.பி.எஸ் ரகசியமாக சந்திக்க வேண்டும்? அதுவும் ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் என்னை ஏன் பார்க்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

ஓபிஎஸ் துரோக சிந்தனை கொண்டவர். எடப்பாடி பழனிச்சாமியை ஒதுக்கி விட்டு என்னுடன் சேர்ந்து செயல்பட விரும்பினார். எப்படியாவது முதலமைச்சராகிவிட வேண்டும் என்று துடிக்கிறார். அதிமுக ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, வாக்களித்தவர் ஓ.பி.எஸ். ஆனால் ராஜ விசுவாசம் குறித்து அவர் பேசுவது நியாயமா? ஓபிஎஸ் என்னிடம் பேசியது பொய் தகவல் என எல்லோரும் சொல்லி வந்தீர்கள். அதை அவரே ஒப்புக்கொண்டு விட்டார்.

இன்னும் 3 மாதத்தில் எல்லாவற்றையும் ஒப்புக்கொள்வார். அப்படி ஒப்புக் கொள்ளாவிட்டால் அந்த தகவலை நான் வெளியிடுவேன். அரசியலுக்காக முன்னுக்குப் பின் முரணாக நடக்கும் பழக்கம் எனக்கு இல்லை. ஓ.பன்னீர்செல்வம் இப்போது தனி மனிதராகி விட்டார். அவருடன் இருந்த பத்து பத்தினைந்து பேரையும் அவர்கள் இழுத்து விட்டார்கள் என்று டிடிவி தினகரன் கூறினார்.