நாளை நடைபெற உள்ள 4 தொகுதி இடைத்தேர்தலில் அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியை வீழ்த்தியே ஆக வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

நடந்து முடிந்த 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்களில் ஆறு தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறுவது நிச்சயமாம்.  அதனால் நாளை நடக்க உள்ள நான்கு தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தல்களில் இரண்டு தொகுதிகளில் வென்றால் மட்டுமே ஆட்சியை தக்க வைக்க முடியும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆகையால் இரண்டு தொகுதிகளிலாவது வெற்றி பெற கட்டாயத்தில் இருப்பதால் அதிமுக இறுதி கட்டத்திலும் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி எந்த விதத்திலும் வெற்றிபெற்று விடக்கூடாது அந்தத் தொகுதியை கண்கொத்தி பாம்பாக கவனிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.  

\

பாஜக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தால் மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என வலியுறுத்தி வரும் தம்பிதுரையிடம், ’நீங்கள் கரூர் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றால் மட்டும் போதாது, அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் நமது கட்சி வெற்றிபெற்றால்தான் மத்திய அமைச்சர் பதவி. செந்தில் பாலாஜி வெற்றி பெற்றால் கரூரில் வலுவாக காலூன்றி விடுவார். அது பின்னாளில் உங்களுக்கு சிக்கலை உருவாக்கி விடும். உங்கள் பரம எதிரியான செந்தில் பாலாஜியை தோற்கடித்தே ஆகவேண்டும். இல்லையெனில் உங்களுக்கு மத்திய அமைச்சர் பதவி இல்லை’’ என கண்டிஷன் போட்டிருக்கிறார் எடப்பாடி.அவருடன் மூத்த அமைச்சர்களான செங்கோட்டையன், தங்கமணி, சுகாதாரத்துறை விஜயபாஸ்கர், போக்குவரத்து விஜயபாஸ்கர் ஆகியோரையும் தேர்தல் பொறுப்பாளர்களாக்கி உள்ளார். இவர்களுடன் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, கே.சி.கருப்பணன் ஆகிய அமைச்சர்கள் மற்றும் திருச்சி, கரூர், நாமக்கல் பகுதி மா.செ.க்கள், ஒன்றிய செயலாளர்கள் என பெரிய படையே களமிறங்கியுள்ளது. அவர்களிடம் தனிப்பட்ட முறையில் தேர்தல் பிரச்சாரப் பயணத்தின்போது எடப்பாடி பேசியிருக்கிறார்.

டி.டி.வி.தினகரன் தரப்பும் செந்தில் பாலாஜியை தோற்கடித்தே தீரவேண்டும். நம்பிக்கை துரோகம் செய்து விட்டு திமுகவுக்கு போனவருக்கு பாடம் புகட்ட வேண்டும் என சபதம் போட்டு இருக்கிறார். ஆக மொத்தத்தில் செந்தில் பாலாஜியை தோற்கடிக்க தேர்தலுக்கு முதல் நாள் எடப்பாடியும் டி.டி.வி.தினகரனும் ஒரே அலைவரிசையில் சபதம் போட்டுள்ளனர். சமாளிப்பாரா செந்தில் பாலாஜி? இன்னும் ஐந்தே நாட்களில் முடிவு தெரிவிந்து விடும்.