வரும் 6ம் தேதி முதல் 3 நாட்கள்..! டிடிவி தினகரன் வெளியிட்ட திடீர் அறிவிப்பு
வரும் 6ம் தேதி முதல் 8ம் தேதி கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுவதாக அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
சென்னை: வரும் 6ம் தேதி முதல் 8ம் தேதி கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுவதாக அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அமமுக சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கூறி உள்ளதாவது: ஒவ்வொரு கணமும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மக்கள் நலக்கொள்கைகளை வாழவைத்திடவும், தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்திடவும் லட்சியப் பயணம் மேற்கொண்டிருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் வருகிற 6.11.2021 முதல் கீழ்காணும் அட்டவணைபடி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் அம்மாவட்டங்களுக்கு உட்பட்ட தலைமைக்கழக நிர்வாகிகள், அமைப்புச்செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், மாநில சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு நாளும் எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை யாருடன் ஆலோசனை என்பது பற்றி முழு தகவல்களும் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டு உள்ளன.
சட்டமன்ற தேர்தல் தோல்வி, உள்ளாட்சி தேர்தல் தோல்வி என அமமுக படு இக்கட்டான நிலையில் இருக்கிறது. கொரோனா காலம் என்பதால் பெரும் ஆர்ப்பாட்டம், கூட்டம் போன்றவற்றை ஏற்பாடு செய்ய முடியாமல் தொண்டர்களை உயிர்ப்புடன் வைத்து கொள்வதில் அமமுக தலைமைக்கும் தொண்டர்கள் இடையே இடைவெளி ஏற்பட்டுள்ளது.
கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பிரமுகர்கள் பலர் கட்சி தாவி வருகின்றனர். முக்கிய தலைவர்களை தக்க வைத்து கொள்ளாமல் இருப்பதால் தலைமை மீது பலரும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் சசிகலாவின் அண்மை கால நடவடிக்கைகள் வேகம் எடுத்து உள்ளதாகவும் அவரது நடவடிக்கைகள் மூலம் சோர்ந்து போன கட்சியினர் உற்சாகம் அடைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ரீதியாக கட்சியில் உள்ள நிலைமை, எதிர்கால செயல்பாடுகள் மற்றும் அரசியல் களத்தில் தொடர வேண்டிய அடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கு யார், யாரை நியமிக்கலாம் என்பது பற்றியும் பேசப்படும் என்று தெரிகிறது. சசிகலாவின் அண்மைக்கால நகர்வுகளுக்கு பிறகு இந்த ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளதால் கட்சியின் தொண்டர்கள் மத்தியில் மட்டுமல்லாது, உயர் மட்ட நிர்வாகிகள் இடையேயும் பெருத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சசிகலாவை பற்றி ஓபிஎஸ் சரியான கருத்தை தான் கூறி உள்ளார் என்று அண்மையில் பேட்டி ஒன்றில் டிடிவி தினகரன் கூறி இருந்தார். அவரது மகள் திருமண வரவேற்பில் ஓபிஎஸ் தம்பி கலந்து கொண்டது பற்றி ஏற்கனவே பல்வேறு தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன.
மொத்தத்தில் தீபாவளிக்கு பின்னர் கூட்டம் நடத்தப்பட உள்ளதாலும் அதன் பின்னர் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாலும் அமமுகவின் ஆலோசனை கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.