டிடிவி தினகரன் முதலில் நாகரீகமாக பேச கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பின்னர் அடுத்தவங்களை குறை சொல்ல வேண்டும் எனவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்படாமல், சமஸ்கிருத பாடலான மகா கணபதி பாடல் பாடப்பட்டது. இந்த விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

விழாவின்போது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் புறக்கணிக்கப்பட்டதாக பல்வேறு கட்சி தலைவர்கள் கடுமையாக எதிர்த்து பேட்டி கொடுத்திருந்தனர். அந்த வகையில் மதிமுக பொது செயலாளர் வைகோவும், கடுமையாக எதிர்த்து பேட்டி கொடுத்திருந்தார்.

வைகோவின் இந்த பேச்சுக்கு எதிராக, பாஜகவின் தேசிய தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசி இருந்தார். அப்போது, மதிமுக பொது செயலாளர் வைகோவை, ஒருமையில் பேசியுள்ளார்.

இந்த நிலையில், சென்னை ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் இன்று சென்னை அடையாறில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மத்திய பாஜக அரசு, சமஸ்கிருதம், இந்தியை திணிக்க முயல்வதாக கூறினார். 

மதிதுக பொது செயலாளர் வைகோ குறித்து ஹெச்.ராஜா அவன் இவன் என்று பேசியது தவறு. வைகோ கூறியதற்கு மறுப்பு தெரிவித்திருக்கலாம். ஒருமையில் பேசியிருக்கக் கூடாது என தெரிவித்திருந்தார். 

இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், டிடிவி தினகரன் முதலில் நாகரீகமாக பேச கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பின்னர் அடுத்தவங்களை குறை சொல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார். 

மேலும் டிடிவி தினகரன் மீடியாவில் பேசிய அனைத்து பேட்டிகளையும் நீங்கள் திரும்ப பார்க்க வேண்டும் எனவும் அவரின் அநாகரீக பேச்சு உங்களுக்கு தெரியவரும் எனவும் தெரிவித்தார்.