சொந்த கிராமத்துக்கே மின்சாரம் கொடுக்காத திரெளபதி பழங்குடியினருக்கு என்ன செய்வார்.? சந்திரசேகரராவ் கட்சி கேள்வி
சொந்த கிராமத்துக்கே மின்சாரத்தை கொடுக்க முடியாத திரௌபதி முர்மு பழங்குடி சமூகத்துக்கு என்ன செய்யப் போகிறார் என்று தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.
நாட்டின் 16-வது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 அன்று நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். திரெளபதி முர்மு நேற்று தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா இன்று தன்னுடைய வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அடுத்த மாதம் 18- ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 21 அன்று எண்ணப்படும். தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர் ஜூலை 25 அன்று குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்பார்.
இதையும் படிங்க: குடியரசுத் தலைவர் தேர்தல்.. இரண்டு தத்துவங்கள், கோட்பாடுகளுக்கு இடையே போட்டி.. திருமாவளவன் புது விளக்கம்!
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் திரெளபதி முர்முவும் யஷ்வந்த் சின்ஹாவும் தங்களுக்கு ஆதரவைத் திரட்டும் வண்ணம் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து வருகிறார்கள். தெலங்கான ராஷ்டிரிய சமிதி கட்சி (டி.ஆர்.எஸ்.) குடியரசுத் தலைவர் தேர்தலில் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவை தெரிவித்துள்ளது. திரெளபதி முர்மு பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், பாஜக அதைப் பெருமையாகப் பேசி வருகிறது. இந்நிலையில் டி.ஆர்.எஸ். கட்சி, திரெளபதி முர்முவை மையமாக வைத்து ட்விட்டர் பக்கத்தில் கேள்வியை எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: திமுக ஆட்சி கவிழ்ப்பு? இன்று மராட்டியம்.. நாளை தமிழ்நாடு -ஆருடம் சொல்லும் நாஞ்சில் சம்பத்
அந்தப் பதிவில், “22 ஆண்டுகள் அரசியல் வாழ்க்கை, 2 முறை எம்.எல்.ஏ., 1 முறை அமைச்சர், 1 முறை ஆளுநர், இன்னும்...! ஆனால், இவ்வளவு காலம் பதவியில் இருந்தும் சொந்த கிராமத்துக்கு மின்சாரத்தை கொடுக்க முடியவில்லை. இதில் இவர்கள் பழங்குடி சமூகத்துக்கு என்ன செய்யப் போகிறார்கள்?" எனக் காட்டமாக டி.ஆர்.எஸ். கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்ப அணியின் அமைப்பாளர் விமர்சனம் செய்துள்ளார்.
இதையும் படிங்க: பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்..?அடுத்த அதிர்ச்சி கொடுக்க தயாராகும் இபிஎஸ் அணி