தேனி மாவட்டம், குரங்கணி வனத்தீ சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று விளக்கமளித்தார். 

குரங்கணி மலை வனப் பகுதியில் பரவிய தீயில் சிக்கி, மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்களில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் பலத்த காயமடைந்தவர்கள், மதுரையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குரங்கணி தீ விபத்தில் இதுவரை 17 பேர் உயரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் குரங்கணி தீ விபத்து தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். 

அப்போது குரங்கணி காட்டுத் தீயில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வத்தார். இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் விளக்கமளித்துப் பேசினார்.

அப்போது, அனுமதி பெறாமல் மலையேற்றத்துக்கு சென்றதால், உயிரிழப்புகள் ஏற்பட்டன. மலையேற்றத்துக்கு அனுமதி இல்லாத பாதை வழியாக அனைவரும் சென்றுள்ளனர். மலைப்பகுதியில் எண்ணெய் பதம் கொண்ட சுக்குநாரி அதிகம் இருந்ததால் தீ வேகமாக பரவியது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.