transport staffs strike continues third day

நீதிமன்றம் விதித்த தடையை மீறியும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்து மூன்றாவது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போக்குவரத்து ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 19,500 வழங்க வேண்டும், ஓய்வூதியம், பணிக்கொடை உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும், வருங்கால வைப்புத்தொகையை உரிய கணக்கில் சேர்க்க வேண்டும், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த 7000 கோடி நிதியை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

13வது ஊதிய ஒப்பந்தத்தில் 2.57% ஊதிய உயர்வு கோரி போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 2.44% என்ற ஊதிய உயர்வு வழங்குவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்க போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சில மறுத்துவிட்டன. சில சங்கங்கள் ஒப்புக்கொண்டன. ஆனால், தொமுச, சிஐடியூ உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சங்கங்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னறிவிப்பின்றி திடீரென நடத்தப்பட்ட இந்த வேலைநிறுத்தத்தால் பொதுமக்களும் பயணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நேற்றைய தினம் 20% பேருந்துகள் மட்டுமே தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டன.

போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, உடனடியாக வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு உத்தரவிட்டது. வேலைநிறுத்தத்திற்கு நீதிமன்றம் தடைவிதித்ததோடு, பணிக்கு திரும்பாதவர்களை பணி நீக்கம் செய்யுமாறும், அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் எனவும் உத்தரவிட்டது.

ஆனாலும், தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை வேலைநிறுத்தத்தை கைவிட முடியாது என்பதில் உறுதியாக இருக்கும் போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் மூன்றாவது நாளாக தொடர்ச்சியாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான பேருந்துகள் இயங்கவில்லை. அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் மட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான பேருந்துகள் இயங்காததால், மக்கள் தங்களது பயணங்களை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுதும் பேருந்து நிலையங்கள் காலியாக காணப்படுகின்றன.