நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொலை மிரட்டலை தொடர்ந்து, இன்று போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இலங்கையில் கடந்த 21-ம் தேதி நடைபெற்ற குண்டு வெடிப்பில் பலர் உயிரிழந்தனர்.  இதனை தொடர்ந்து தமிழகத்திலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இதற்கிடையே தமிழகத்தில் குண்டுவெடிக்கும் என்றும், தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர் மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.

 

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கொடைக்கானலில் வைத்து கொலை செய்ய இருப்பதாக மர்ம நபர் ஒருவர் சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர். இப்படி தொடர்ச்சியாக வரும் மிரட்டல் போன்களால் சென்னை போலீசார் கதி கலங்கிப்போய் உள்ளனர். 

இந்நிலையில் நேற்று இரவு அடையாறு கிரீன் வேஸ் சாலையில் உள்ள போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசாரும்,  வெடி குண்டு நிபுணர்களும் சோதனை செய்தனர். ஆனால் மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. கடந்த சில நாட்களாகவே அதிமுகவினருக்கு தொடர்ந்து கொலை வருவது குறிப்பிடத்தக்கது.