காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துவருகின்றன. 

தமிழக விவசாயிகள், அரசியல் கட்சியினர், மாணவர்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் ஒருமித்த குரலுடன் போராட்டத்தில் குதித்துள்ளனர். திமுக சார்பில் தினமும் மறியல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

ஆளும் அதிமுக சார்பிலும் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. சென்னை சேப்பாக்கத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையிலும் மற்ற மாவட்டங்களில் அமைச்சர்களின் தலைமையிலும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.

திமுக சார்பில் தினமும் மறியல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. எனினும் திமுக சார்பில் கூட்டப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில், வரும் 5ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வரும் 5ம் தேதி முழுஅடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் அந்த போராட்டத்திற்கு தொமுச ஆதரவு தெரிவித்துள்ளது. தொமுச உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் அன்றைய தினம் ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் பெரும்பாலான பேருந்துகள், வரும் 5ம் தேதி இயங்காது. போராட்டத்தில் ஈடுபடாத சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் மட்டுமே பணியாற்றுவார்கள். அதனால் குறைவான பேருந்துகளே இயங்க வாய்ப்புள்ளது.