Asianet News TamilAsianet News Tamil

தகுதியில்லாதவங்கள இப்படி கொல்லைப்புறம் வழியாக இந்த வேலைக்கு வைக்கலாமா? கொதித்தெழும் ராமதாஸ்

இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி உள்ளிட்ட குடிமைப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யும் முறையில் மாற்றம் செய்ய மத்திய அரசு மீண்டும் முடிவு செய்துள்ளது. தகுதி மற்றும் திறமை அடிப்படையில் இப்போது பணிகள் ஒதுக்கப்பட்டு வரும் நிலையில், அதில் மாற்றம் செய்ய மத்திய அரசு மீண்டும், மீண்டும் முயல்வதை சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.

Transforming civic work into social justice is murder
Author
Chennai, First Published Jul 28, 2019, 2:37 PM IST

இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி உள்ளிட்ட குடிமைப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யும் முறையில் மாற்றம் செய்ய மத்திய அரசு மீண்டும் முடிவு செய்துள்ளது. தகுதி மற்றும் திறமை அடிப்படையில் இப்போது பணிகள் ஒதுக்கப்பட்டு வரும் நிலையில், அதில் மாற்றம் செய்ய மத்திய அரசு மீண்டும், மீண்டும் முயல்வதை சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் குடிமைப்பணித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்தத் தேர்வுகளில் வெற்றி பெறும் மாணவர்களின் தரவரிசை அடிப்படையில் அவர்களுக்கு இந்திய ஆட்சிப்பணி, இந்தியக் காவல் பணி, இந்திய வெளியுறவுப் பணி, இந்திய வருவாய் பணி உள்ளிட்ட 23 வகையான பணிகளும், அவர்கள் பணியாற்றுவதற்கான மாநிலப் பிரிவும் ஒதுக்கப்படுகின்றன. காலம் காலமாக இதே நடைமுறையைத் தான் தேர்வாணையம் பின்பற்றி வருகிறது.

குடிமைப் பணித் தேர்வுகளின் முதன்மைத் தேர்வுகள் மொத்தம் 1750 மதிப்பெண்களுக்கு நடத்தப் படுகின்றன. நேர்காணல் 275 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. ஆக மொத்தம் 2025 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் தான் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்த முறையில், நேர்காணலின் போது சிலருக்கு சாதகம் காட்டப்படுவதாக எப்போதாவது எழுப்பப்படும் குற்றச்சாட்டு தவிர வேறு புகார்கள் எழுவதில்லை. இந்த முறையைத் தான் மாற்ற அரசு துடிக்கிறது.

மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய முறையில், தரவரிசைப்படி அனைவருக்கும் பணிகளும், பணி செய்யும் இடங்களும் ஒதுக்கப்பட்டு, அதன்பின் அவர்கள் நிர்வாகப் பயிற்சிக்காக அனுப்பப்படுவார்கள். அந்த பயிற்சிக்காக ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் மதிப்பெண்களில் 10% மதிப்பெண்கள் தகுதி காண் மதிப்பெண்களாக கணக்கில் கொள்ளப்படும். அந்த மதிப்பெண் ஏற்கனவே, முதன்மைத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்களுடன் சேர்த்து, பயிற்சிக்கு வந்தவர்களுக்கு மட்டும் மீண்டும் ஒரு தரவரிசை தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையில் பணிகள் ஒதுக்கப்படும். இந்த முறை தவறானது; பிடிக்காதவர்களை பழிவாங்க பயன்படுத்தப்படும் என்பது தான் பா.ம.க.வின் குற்றச்சாட்டாகும்.

உதாரணமாக, 15 வாரங்கள் நடக்கும் அடிப்படைப் பயிற்சி வகுப்புகளுக்கு மொத்தம் 500 மதிப்பெண் என்று வைத்துக் கொள்வோம். 500 மதிப்பெண்களுக்கு ஒவ்வொருவரும் எடுக்கும் மதிப்பெண்களில் 10% மட்டும் தகுதிகாண் மதிப்பெண்ணாக எடுத்துக் கொள்ளப்படும். பயிற்சி வகுப்பில் 500-க்கு மற்றவர்கள் எல்லாம் 300 அல்லது அதற்கும் குறைவாக எடுத்திருக்கும்பட்சத்தில், ஒருவர் மட்டும் 400 மதிப்பெண் எடுத்து விட்டால், அதில் 10% அதாவது 40 மதிப்பெண் அவரது கணக்கில் சேர்க்கப்படும். அது மற்றவர்களை விட மிக அதிகம் என்பதால், அதைப் பயன்படுத்தி தரவரிசையில் அவர் 200 இடங்களுக்கு மேல் முன்னேறிவிடுவார். சாதாரணமான பணிக்கு தேர்வான ஒருவர் பயிற்சியின் போது கிடைத்த கூடுதல் மதிப்பெண்களை வைத்துக் கொண்டு, இந்திய ஆட்சிப் பணியையோ, காவல் பணியையோ கைப்பற்ற முடியும். அதேபோல், இ.ஆ.ப., இ.கா.ப., ஆகிய பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், பயிற்சியில் குறைவான மதிப்பெண் பெற்றால் அவர் கீழ்நிலைப் பணிக்கு தள்ளப்பட்டு விடுவார்.

பயிற்சி என்பது ஒருவருக்கு ஒரு விஷயத்தைக் கற்றுக் கொடுப்பது ஆகும். அதை பணியின் போது ஒருவர் திறமையாக பயன்படுத்துகிறாரா? என்று தான் பார்க்க வேண்டுமே தவிர, அதையே பணி ஒதுக்குவதற்கான தகுதியாக மாற்றக்கூடாது. அதுமட்டுமின்றி, பயிற்சியின் போது ஒருவரை, ஏதோ ஒரு காரணத்திற்காக உயரதிகாரிகளுக்கு பிடித்திருந்தால் அவருக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கி, அவரது தரவரிசையை உயர்த்துவதற்கும், பிடிக்காவிட்டால் அவருக்கு குறைவான மதிப்பெண் வழங்கி தரவரிசையை குறைத்து சாதாரண பணிக்கு அனுப்புவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. இப்புதிய நடைமுறை 100% தவறாக பயன்படுத்தப்படும் என்ற குற்றச்சாற்றையும், ஐயத்தையும் எவரும் நிராகரிக்க முடியாது. தகுதியுள்ளவர்களை பழிவாங்க வாய்ப்பளிக்கும் இந்த முறை சமூகநீதியை படுகொலை செய்வதற்கு பயன்படுத்தப்படும் ஆயுதமாக அமையும் என்பதை மத்திய அரசுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

குடிமைப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யும் முறையை மாற்ற கடந்த ஆண்டே மத்திய அரசு முயன்றது. அப்போது முழுக்க முழுக்க பயிற்சியின் போது எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் பணி ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்போது இந்த முயற்சி கைவிடப்பட்டது. இப்போது அதில் சில மாற்றங்களைச் செய்து பயிற்சி மதிப்பெண்களின் அடிப்படையில் பணி ஒதுக்கீடு செய்ய வைக்க வேண்டும் என்று துடிப்பது ஏன்? மத்திய ஆட்சியாளர்களுக்கும், உயர்பதவிகளில் இருப்பவர்களுக்கும் வேண்டியவர்கள் மட்டும் தான் இ.ஆ.ப., இ.கா.ப., பணிகளுக்கு வர வேண்டும்; குறிப்பாக இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் இத்தகைய உயர்பதவிகளுக்கு வந்து விடக்கூடாது என்பதற்காவே இப்படி செய்யப்படுகிறது என்று முன்வைக்கப்படும் வாதங்களுக்கு மத்திய அரசின் வேகம் வலு சேர்க்கிறது.

இந்தியாவை நிர்வகிப்பதில் ஆட்சியாளர்களுக்கு துணை நிற்பவர்கள் இ.ஆ.ப., அதிகாரிகள் தான். அந்த பணியிடத்திற்கு தகுதியானவர்களும், திறமையானவர்களும் தான் தேர்வு செய்யப்பட வேண்டும். தகுதியில்லாதவர்கள் கொல்லைப்புறம் வழியாக இந்த பணிக்கு வருவதை அனுமதிக்க முடியாது. எனவே, குடிமைப் பணிகளை ஒதுக்கும் முறையில் செய்யப்படவிருந்த மாற்றங்களை கைவிடுவதுடன், இப்போதுள்ள நடைமுறையே தொடரும் என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன் எனக் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios