Asianet News TamilAsianet News Tamil

பாஜகவின் கிளைப்பிரிவு போல செயல்படும் என்ஐஏ..! கோவை சிலிண்டர் வெடி விபத்தை ஒப்படைத்தது தவறு- சீமான் ஆவேசம்

கோவை சிலிண்டர் வெடிப்பு வழக்கை தேசியப் புலனாய்வு முகமையிடம் ஒப்படைப்பது மிகத்தவறான முடிவு என தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தேசியப்புலனாய்வு முகமையானது பாஜகவின் கிளைப்பிரிவு போல செயல்பட்டு, இசுலாமிய மக்களைக் குறிவைத்து வேட்டையாடுவதாக நாடெங்கிலும் குற்றஞ்சாட்டுகள் வைக்கப்படுவதாக கூறியுள்ளார்.
 

Transferring the Coimbatore car blast case to the NIA was a wrong decision says Seeman
Author
First Published Oct 27, 2022, 10:33 AM IST

கோவை கார் வெடி விபத்து

கோவை கார் வெடி விபத்து வழக்கு என்ஐஏயிடம் தமிழக அரசு ஒப்படைத்தது தவறான முடிவு என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை, உக்கடம் அருகே வாகனத்தில் எரிகாற்று உருளை வெடித்துச் சிதறியதில் ஒருவர் பலியானது தொடர்பான வழக்கு விசாரணையை தேசியப்புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்திருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை மிகத்தவறான நிர்வாக முடிவாகும். தேசியப்புலனாய்வு முகமையானது பாஜகவின் கிளைப்பிரிவு போல செயல்பட்டு, இசுலாமிய மக்களைக் குறிவைத்து வேட்டையாடுவதாக நாடெங்கிலும் குற்றஞ்சாட்டுகள் வைக்கப்படும் நிலையில், மாநிலத் தன்னாட்சியென முழங்குகிற திமுக அரசு, தேசியப்புலனாய்வு முகமையின் வசம் இவ்வழக்கை ஒப்படைத்திருப்பது ஏற்கத்தக்கதல்ல! வன்முறைச்செயலில் ஈடுபட்டு, சமூக அமைதியைக் குலைக்க முனைவோர் எவராயினும் அவர்களை சாதி, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு, கடும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. 

கோவை கார் வெடி விபத்து.! கைதானவர்கள் மூளை சலவை செய்யப்பட்டுள்ளனர்...! எந்த ஜமாத்துடனும் தொடர்பில் இல்லை..?

Transferring the Coimbatore car blast case to the NIA was a wrong decision says Seeman

என்ஐஏக்கு மாற்றியது ஏன்..?

அதேசமயம், இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் இசுலாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே, அச்சமூகத்தினரையே குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் போக்கென்பது மிக ஆபத்தானது. விபத்து குறித்த காவல்துறையின் விசாரணை நிறைவடைவதற்கு முன்பாகவே, இக்கோர நிகழ்வுக்கு மதச்சாயம் பூசுவது அப்பட்டமான மதக் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடேயாகும். அவ்விபத்து நடந்தவுடன் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்து, உரிய ஒத்துழைப்பு வழங்கி வரும் இசுலாமிய மக்களைக் குற்றப்படுத்தும் நோக்கோடு மதவாதிகளால் செய்யப்படும் கருத்துருவாக்கங்களும், கட்டமைப்புகளும் கடும் கண்டனத்திற்குரியது.

 

காவல்துறையின் விசாரணை நிறைவடைவதற்கு முன்பாகவே, இவ்வழக்கை அவசர அவசரமாக தேசியப்புலனாய்வு முகமைக்கு மாற்ற வேண்டிய அவசியமென்ன வந்தது? இவ்வழக்கில் பன்னாட்டுத்தொடர்பு இருக்கும் வாய்ப்புள்ளதெனக் காரணம் கற்பிக்கும் திமுக அரசு, விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டுவதற்கு முன்பே, அத்தகைய முன்முடிவுக்கு எதன் அடிப்படையில் வந்தது?

Transferring the Coimbatore car blast case to the NIA was a wrong decision says Seeman

 இறையாண்மைக்கு எதிரானது

துப்பறிந்து விசாரணை செய்வதில் பெயர்பெற்ற தமிழகக் காவல்துறையிடமுள்ள வழக்கை தேசியப் புலனாய்வு முகாமையிடம் ஒப்படைப்பதன் மூலம் தனது இயலாமையை ஏற்றுக்கொள்கிறாரா? அல்லது காவல்துறையின் மீதே நம்பிக்கையை இழந்துவிட்டாரா முதல்வர்? எதற்காக இந்த முடிவு? காவல்துறையின் மீதே மதச்சாயம் பூசி, மாநில உளவுத்துறையின் தோல்வியென குற்றஞ்சாட்டும் பாஜகவின் கூற்றை ஏற்றுக்கொண்டுதான் வழக்கை கைமாற்றி விடுகிறதா மாநில அரசு? தன்னாட்சி அதிகாரம் கொண்ட மத்தியப் புலனாய்வு விசாரணை அமைப்பையே கையகப்படுத்தி, பழிவாங்கும் நோக்கத்தோடு எதிர்க்கட்சிகள் மீது பாஜக அரசு ஏவி வரும் நிலையில், கட்டற்ற அதிகாரத்தைக் கொண்டிருக்கும் தேசியப் புலனாய்வு முகமையை இதுபோன்ற வழக்குகளில் நுழைய வழிவகை செய்வது மாநிலத்தின் இறையாண்மைக்கு எதிரானது இல்லையா? ஸ்டோன் சுவாமி, வரவர ராவ், ஆனந்த் டெல்டும்டே போன்ற சமூகச்செயற்பாட்டளர்கள் பீமா கொரேகான் வழக்கில் தேசியப் புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டுள்ளது போல, இவ்வழக்கில் அப்பாவி இசுலாமியர்களும் கைதுசெய்யப்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது? 

கோவை கார் வெடி விபத்து..! இறந்த முபினின் உறவினர் அப்ஸர் கானை அதிரடியாக கைது செய்த போலீஸ்

Transferring the Coimbatore car blast case to the NIA was a wrong decision says Seeman

சனநாயக சக்திகள் அணிதிரள்வோம்

தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்க, தேசியப்புலனாய்வு முகமைக்கு வாசல்திறந்து விடுவதுதான் மாநிலத் தன்னாட்சியைக் கட்டிக்காக்கிற இலட்சணமா முதல்வரே? வெட்கக்கேடு! ஆகவே, இவ்விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தி, அக்கோர நிகழ்வின் பின்புலத்திலுள்ள உண்மையை வெளிக்கொணர்ந்து, குற்றமிழைத்தவர்கள் எவராயினும் அவர்களைக் கடும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டுமெனக் கோருகிற அதேவேளையில், தேசியப் புலனாய்வு முகமையிடம் வழக்கைத் தாரைவார்த்திருப்பதற்கு எனது எதிர்ப்பினைப் பதிவு செய்கிறேன். இத்தோடு, இக்கொடும் நிகழ்வை அடிப்படையாக வைத்து மதப்பூசலுக்கு வித்திட்டு, அரசியல் ஆதாயம் தேட முயலும் மதவாத சக்திகளின் சூழ்ச்சியை முறியடிக்க சனநாயக சக்திகள் அணிதிரள வேண்டுமென வலியுறுத்துவதாக சீமான் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

வெடி பொருட்களை பிலிப்கார்ட், அமேசானில் வாங்கிய அப்ஸர் கான்..! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்

Follow Us:
Download App:
  • android
  • ios