கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே ஆலஞ்சி பாலியக்கல் பீச் கடற்பகுதியில் உள்ள பாறைகளில் ஏறி செல்பி எடுக்க முயன்ற போது சறுக்கி விழுந்து கடல் அலையில் சிக்கி இரு வாலிபர்கள் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை அருகே செங்கல்பட்டு பகுதியைச் சார்ந்தவர்கள் 17 பேர், கன்னியாகுமரி மாவட்டம் ஆலஞ்சி பகுதியில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு வந்துள்ளனர். இந்நிலையில் புத்தாண்டு என்பதால் நேற்றி மாலை 5 மணி அளவில் அவர்கள் ஆலஞ்சி பகுதியில் உள்ள பாலியக்கல் பீச் பகுதிக்கு சென்றுள்ளனர். 

இவர்களில் மூன்று பேர் கடற்கரையில் அமைந்துள்ள பாறையில் ஏறி செல்பி எடுக்க முயற்சித்துள்ளனர். பாறையின் தன்மை அறியாத இவர்கள் பாறையிலிருந்து சறுக்கி  விழுந்து அலையில் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்களில் ஒருவர் மட்டும் தப்பிய நிலையில் சென்னை அருகே செங்கல்பட்டை சார்ந்த பாலாஜி(19).  இன்னொருவர் கருங்கல் அருகே கப்பியறை  பகுதியைச் சார்ந்த ஜெபின்(24) ஆகியோர் கடலில் மாயமாகினர். 

இவர்களை மீட்கும் பணியில் அப்பகுதியிலுள்ள மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகர் உட்பட அரசு அதிகாரிகள் காவல்துறையினர் வந்துள்ளனர். கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த பெற்றோர் கதறி அழுத காட்சி, காண்போரையும் கண்கலங்க வைப்பதாக இருந்தது..