Traffic workers have been forced into a struggle by the maneuver of the Ettapadi government

போக்குவரத்து ஊழியர்களை தமிழக அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் வைத்திருக்கும் கோரிக்கையான ஊதிய உயர்வு 2.57 சதவீதத்தை ஏற்கொண்டு அதனை நிறைவேற்ற வேண்டும் எனவும் டிடிவி ஆதரவாளரும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏவுமான செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

ஊதிய உயர்வு வழங்க வேண்டும், அடிப்படை ஊதியத்தை குறைந்தபட்சம் 20, 700 ஆக உயர்த்த வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் முன் வைக்கப்பட்டன.

ஆனால் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்க அரசு முன்வரவில்லை. பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. 

இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் நேற்றுமுதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. 

போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் தனியார் ஓட்டுனர்களை வைத்து பேருந்தை இயக்க அரசு மும்முரம் காட்டி வருகின்றது. 

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி, தொழிலாளர்களையும் பொதுமக்களையும் காக்க தமிழக அரசு உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும் என தெரிவித்தார். 

எடப்பாடி அரசின் மெத்தன போக்கால் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தும் அளவுக்கு தள்ளப்பட்டுள்ளனர் எனவும் அவர்கள் விரும்பி இந்த போராட்டத்தை செய்யவில்லை எனவும் குறிப்பிட்டார். 

அமைச்சர் விஜயபாஸ்கர் 90 சதவீத பேருந்துகள் இயங்குகிறது என கூறுவது பொய் எனவும் இங்கு எந்த அளவுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது என்று அனைவரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம் எனவும் தெரிவித்தார். 

பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் என்பதையும் பார்க்கிறோம் என குறிப்பிட்டார். 

மற்றத்துறைகளுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதிகளை போலா போக்குவரத்து துறைக்கும் முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.