வரதட்சணை கொடுமைக்கு வழங்கப்படும் சிறை தண்டனை 7-லிருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு அனைத்து தரப்பினர் மத்தியிலும்  மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 

தமிழக சட்டமன்ற கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 14ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. எம்எல்ஏக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து கூட்டத்தொடரில் பங்கேற்றனர் முதல்நாளில் மறைந்த முன்னாள் எம்எல்ஏக்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, எம்எல்ஏ ஜெ.அன்பழகன், எம்.பி வசந்தகுமார் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்து சபை ஒத்திவைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து இரண்டாவது நாளான நேற்று கேள்வி நேரத்துடன் சட்டசபை தொடங்கியது, இதில் எம்எல்ஏக்கள்  எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். நீட் தேர்வு குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. கூட்டத்தொடரின் கடைசி மூன்றாவது மற்றும் கடைசி நாளான இன்று, துணை  முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நடப்பு நிதியாண்டிற்கான கூடுதல் செலவிற்கான துணை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மேலும் ஜெயலலிதா இல்லம்  அரசுடமை, அண்ணா பல்கலைகழகம் இரண்டாக பிரிப்பது உள்ளிட்ட 6 மசோதாக்கள் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. 

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார் அதில், தமிழகத்தில் வரதட்சணை கொடுமைக்கான தண்டனை 7லிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார். அதேபோல் பெண்களை பின் தொடர்ந்து தொந்தரவு செய்வதற்கான தண்டனை 5 ஆண்டிகளில் இருந்து 7 ஆண்டுகளாக உயர்த்தவும், பரிந்துரை செய்யப்படும் என்றார். மேலும் 18 வயதுக்கு உட்பட்ட பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினால் ஆயுள் தண்டனை தர பரிந்துரை செய்யப்படும் என அறிவித்தார். அவரின் அறிவிப்பு அனைத்து தரப்பினர் மத்தியிலும் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.