தேனியில் ஊரடங்கு காலத்திலும் கார் கடனை திருப்பி செலுத்தக்கூறி எச்.டி.எஃப்.சி. வங்கி நெருக்கடி அளித்ததால், மனமுடைந்து கார் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. தற்கொலைக்கு முன் அந்த கார் ஓட்டுநர் தனது மகளிடம் பரிதவிப்புடன் பேசிய ஆடியோவும் வெளியாகியுள்ளது.

தேனி அல்லிநகரத்தை சேர்ந்த கார் ஓட்டுநரான முருகன், தன் மனைவி மற்றும் 3 மகள்களுடன் வசித்து வந்தார். கடந்த ஆண்டு தேனியில் உள்ள ஹச்.டி.எப்.சி வங்கி கிளையில் 9 லட்சம் ரூபாய் கார் கடன் பெற்ற முருகன், அதற்கான தவணை தொகையை சில மாதங்களாக முறையாக செலுத்தி வந்துள்ளார்.

இதற்கிடையே, கொரோனா ஊரடங்கு காரணமாக, வருமானமில்லாததால் முருகன், 6 மாதங்களாக தவணை தொகை கட்டாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, கடன் வசூலிக்கும் பிரத்யேக ஊழியர்கள் சிலர் முருகன் வீட்டுக்கு வந்து கடனை திருப்பிச் செலுத்தக்கூறி, காரை ஜப்தி செய்துவிடுவோம் என மிரட்டி நெருக்கடி அளித்தாகவும் சொல்லப்படுகின்றனது. இதனால், மனமுடைந்த முருகன், அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயிலுக்கு அருகேயுள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன்பு, வீட்டில் இருந்த தன் மகள் ரம்யாவை செல்போனில் தொடர்பு கொண்ட அவர்,ஹச்.டி.எப்.சி வங்கி நிறுவனத்தினர் தன்னை மிகவும் தொந்தரவு செய்வதாகவும், தாம் பேசுவதை மட்டும் போனில் ரெக்கார்டு செய்துகொள்ளும்படி பரிதவிப்புடன் பேசிய ஆடியோவும் வெளியாகியுள்ளது.

இதனிடையே, கார் ஓட்டுநர் முருகனை தற்கொலைக்கு தூண்டிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த வலியுறுத்தி தேனி ஹச்.டி.எப்.சி வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. அப்போது, முருகனின் மனைவியும், மகளும் சாலையில் கிடந்து கதறி அழுதது காண்போரை கலங்கச் செய்தது.சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும், அசம்பாவிதங்களை தவிர்க்க, ஹச்.டி.எப்.சி வங்கி முன் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த எச்.டி.எஃப்.சி வங்கி கிளை மேலாளர், கடனை திருப்பி செலுத்தக் கேட்டு முருகன் வீட்டுக்கு சென்ற ஊழியர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.