Top Political leader meet Karunanidhi

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரசியல் காற்று திசை மாறி வீச துங்கியிருக்கிறது! பி.ஜே.பி., கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க., ச.ம.க. என்று எல்லா கட்சிகளின் முக்கிய தலைவர்களும் கருணாநிதியை சந்திக்க கோபாலபுரம் நோக்கி படையெடுப்பது ஒரு புதிய உத்வேகத்தை தி.மு.க.வுக்கு தந்திருக்கிறது என்பதில் மாற்றமில்லை.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பிரதமர் மோடி, கருணாநிதியை கோபாலபுரத்தில் சந்தித்த பின் தி.மு.க.வுடன் கூட்டணியிலிருக்கும் காங்கிரஸ் ‘எங்கே ஸ்டாலின் நம்மை கழட்டிவிட்டு விடுவாரோ?’ என்று கலங்கியது. அ.தி.மு.க.வின் ஆளும் அணியோ ‘எங்கே மோடி நம்மை கைவிட்டு விடுவாரோ?’ என்று கலங்கிக் கொண்டிருக்கிறது. 
இரு பெரும் கட்சிகளின் இந்த பதற்றத்தைக் கண்டு நமுட்டுச் சிரிப்புடன் தங்கள் பாதையில் காய் நகர்த்த துவங்கியுள்ளன தி.மு.க.வும், பி.ஜே.பி.யும். 

இந்நிலையில் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு கருணாநிதியை சந்தித்திருக்கிறார். அதைவிட சரத்குமாரும் கருணாநிதியை சந்தித்து ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். ‘நான் இறந்தாலும் என் மீது தி.மு.க. கொடிதான் போர்த்தப்பட வேண்டும்.’ என்று சொல்லி கருணாநிதியிடம் அதீத விசுவாசம் காண்பித்து அந்த பேச்சின் எச்சில் ஈரம் காய்வதற்குள் அ.தி.மு.க.வில் இணைந்து, புதுக்கட்சி துவக்கி, கூட்டணி வைத்து எம்.எல்.ஏ.வாகி பின் அடுத்த தேர்தலில் சீட் கிடைக்காமல் போனதால் தி.மு.க. பக்கம் தாவ முயற்சித்து பின் கடைசி நொடியில் அ.தி.மு.க. கூட்டணியிலேயே தங்கி தோற்ற சரத்குமாரின் இந்த சந்திப்பும் கவனம் பெற்றிருக்கிறது. 

வைகோ துவக்கி வைத்த இந்த ‘எ மொமண்ட் வித் கலைஞர்’ திட்டம் இப்படி தொடர்ந்து தூள் கிளப்பி வருகிறது. அ.தி.மு.க.வுக்கு எதிராக தி.மு.க.வின் தலைமையில் பெரும் கூட்டணி ஒன்றமைவதற்கான திட்டமாக இது இருக்குமோ? இப்போது இல்லையென்றாலும் பின்னாளில் அமைய இது வாய்ப்பை தருமோ?! அல்லது வட இந்தியா போல் இங்கும் எதிர்கட்சி தலைவர்களை சக மனிதர் எனும் முறையில் சந்தித்து உடல் நலன் விசாரிக்கும் மனிதநேய பண்பாடு ஒன்று தமிழகத்திலும் எழுந்திருக்கிறதா!என்று அலசல் பேச்சுகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.