தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி நிரந்தர சட்ட திருத்தம் செய்து நடத்த வேண்டும். பீட்டா அமைப்புக்கு தடைவிதிக்க வேண்டும் என போராட்டம் நடந்து வருகிறது. இன்று 6வது நாளை எட்டியுள்ள இந்த போராட்டத்தால், தமிழகம் முழுவதும் பெரும் போர்க்களமாக காட்சியளிக்கிறது.
இன்று அலங்காநல்லூரி, கோவில்பட்டி, கோவை, திண்டுக்கல் உள்பட பல பகுதிகளில் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் நடத்த முயன்ற ஜல்லிக்கட்டு போட்டி கடும் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டன. இதையடுத்து, மக்கள் விரும்பும்போது, ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என கூறியுள்ளார்.
இந்நிலையில், நாளை சட்டமன்ற கூட்டம் தொடங்க இருக்கிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், கவர்னர் உரையுடன் தொடங்கும். இதில், ஜல்லிக்கட்டு போட்டிக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். பீட்டா அமைப்புக்கு தடை விதிக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.
அதேவேளையில் சென்னை மெரினாவில், ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டும் என லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளை சட்டமன்ற கூட்டம் நடக்கும்போது, போராட்டம் நடத்தும் மாணவர்கள், தலைமை செயலகத்தை முற்றுகையிடவும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
இதனால், கடற்கரை சாலை வழியாக செல்லும் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிமுக எம்எல்ஏக்கள் மாற்று பாதையில் செல்வார்கள் என்றும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட இருப்பதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.
