மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான மு.கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிட்டத்தில் அஞ்சலி நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திமுக ஏற்பாடு செய்துள்ளது. கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி பிரசாந்த கிஷோரின் ஐபேக் மற்றும் திமுக ஐ.டி. விங் சார்பில் ‘எங்கெங்கும் கலைஞர்’ ‘ஒளிமிகுந்த சிற்பி’ போன்ற ஹாஷ்டேக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை  திமுகவினர் நேற்று முதலே சமூக ஊடங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.


இந்த ஹாஷ்டேக்குகள் மூலம் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளை திமுகவினர் பதிவிட்டுவருகிறார்கள். ‘எங்கெங்கும் கலைஞர்’ என்ற ஹாஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முன்னணியில் உள்ளது. கடந்த ஜூன் 3-ம் தேதி கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி ‘நவீன தமிழகத்தின் சிற்பி’ என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி திமுகவினர் டிரெண்ட் செய்தார்கள். அதே பாணியில் கருணாநிதியின் நினைவு நாளிலும் ஹாஷ்டேக்குகள் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டுவருகின்றன.


இந்த ஹாஷ்டேக்குகளுக்கு எதிராக பாஜக-அதிமுக-நாதக போன்ற கட்சிகள் களமிறங்கியுள்ளன. ‘நவீன தமிழகத்தின் சிற்பி’ என்று கடந்த ஜூன் 3 அன்று திமுகவினர் டிரெண்ட் செய்தபோது போட்டியாக இக்கட்சிகள் ‘ஃபாதர் ஆப் கரெப்ஷன்’ என்ற ஹாஷ்டேக்கை டிரெண்டிங் செய்தார்கள். அதே ஹாஷ்டேக்கை மீண்டும் இந்த முறையும் பாஜக-அதிமுக-நாதக மற்றும் திமுக எதிர்ப்பாளர்கள் பயன்படுத்தி ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த ஹாஷ்டேக்கும் முன்னணியில் உள்ளது. 
கருணாநிதியின் நினைவு நாளிலும் ட்விட்டரில் திமுகவினரும் பாஜக-அதிமுக உள்ளிட்ட கட்சியினரும் அடித்துக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.