பெரும் எதிர்பார்ப்பு மற்றும் பரபரப்புக்கு இடையே, குஜராத்தில், மூன்று ராஜ்யசபா, எம்.பி.,க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல், இன்று நடக்கிறது. சோனியாவின் விசுவாசியும், அவரது அரசியல் ஆலோசகருமான, அஹமது படேலின் வெற்றியை பறிப்பதற்கு, பாஜக தீவிரம் காட்டுவதால், காங்கிரஸ் கட்சியினர்  பதற்றமடைந்துள்ளனர்.

குஜராத்தில் பாஜகவைச் சேர்ந்த  விஜய் ரூபானி முதலமைச்சராக உள்ளார். இந்த மாநிலத்தில் ஆளும், பாஜகவுக்கு, 121 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். எதிர்க்கட்சியான, காங்.,கிற்கு, 57 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர்; இதில், ஆறு பேர், சமீபத்தில், கட்சியை விட்டு விலகினர். இவர்களில் மூன்று பேர், பா.ஜ.,வில் சேர்ந்துள்ளனர்.

இந்த மாநிலத்தில், காலியாகும் மூன்று ராஜ்யசபா இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடங்களுக்கு, பாஜக  தேசியத் தலைவர், அமித் ஷா, மத்திய ஜவுளித்துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி மற்றும் காங்கிரசில்  இருந்து அண்மையில்  விலகி, பாஜகவில் சேர்ந்த, பல்வந்த்சிங்ராஜ்புத் ஆகியோர், பாஜக  சார்பில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் இருவர் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது இடத்தை கைப்பற்றும் நோக்கில், காங்கிரஸ் கட்சி சார்பாக, அந்த கட்சி தலைவர் சோனியாவின் செயலர், அஹமது படேல் நிறுத்தப்பட்டுள்ளார். 

ஆனால், காங்கிரஸ் இருந்து, எம்.எல்.ஏ.,க்கள் விலகி வருவதால், ராஜ்யசபா தேர்தலில், மூன்றாம் இடத்தை கைப்பற்ற முடியாமல் போய்விடுமோ என்ற பயம், காங்கிரஸ், தலைவர்கள் மத்தியில் ஏற்பட்டது.

இதையடுத்து, காங்கிரஸ் எம்எல்ஏக்களில், 44 பேர், அந்த கட்சியின் ஆட்சி நடக்கும், கர்நாடகா தலைநகர், பெங்களூரு அழைத்து செல்லப்பட்டு, சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் அவர்கள் நேற்று அகமதாபாத் திரும்பினர்.

 இந்நிலையில் பெங்களூரு அழைத்துச் செல்லப்படாத, காங்கிரசைச் சேர்ந்த ஏழு 
எம்எல்ஏக்கள்  யாருக்கு ஓட்டு போடுவர் என குறைந்தபட்சம், 46 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உறுதியாக தெரியவில்லை என்பதால்  

அஹமது படேல் வெற்றி கேள்விக்குறியாகியுள்ளது.