முதலமைச்சர் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் அணிகள் இணையும் வகையில் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கவும், அதிமுக பொதுச் செயலாளர் பதவியை ரத்து செய்யவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணி முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


கடந்த வெள்ளிக்கிழமையன்று அதிமுகவின் இரு அணிகளும் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  ஜெ, சமாதியில் கூடிய தொண்டர்கள்  ஏமாற்றமடைந்தனர்.

இந்த நிலையில் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.  இக்கூட்டத்தில் அதிமுகவின் சட்டதிட்ட விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியிகியுள்ளன.

அதன்படி  அதிமுக பொதுசெயலாளர் பதவியை ரத்து செய்தும், சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கியும் சில அதிரடி முடிவுகள் அதிமுக நிர்வாகிகளால் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுகவின் பொதுசெயலாளர் பதவியை நீக்கிவிட்டு வழிகாட்டுதல் என்றவொரு குழுவை அமைக்கும் வகையில் இந்த திருத்தம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய வழிகாட்டுதல் குழுவுக்கு ஓபிஎஸ்  தலைவராக இருக்கலாம் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை நீக்குவதுடன் சசிகலாவையும் கட்சியிலிருந்து நீக்கும் முடிவையும் மேற்கொள்ளலாம். இந்த நிர்வாகிகள் கூட்டத்தைத் தொடர்ந்து அதிமுகவின் இரு அணிகளுமே இணைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.