காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக, மாவட்டத் தலைநகரங்களில் அதிமுக சார்பில் இன்று  உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.இதே போல் மாநிலம் முழுவதும் வணிகர்கள் கடைகளை அடைத்து தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியத்தையும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவையும் அமைக்கக் கோரி தமிழகத்தில் அனைத்துக்கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. நாடாளுமன்றத்திலும் அதிமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை உச்ச நீதிமன்றம் அறிவித்த ஆறு வாரங்களுக்குள் அமைக்காததால் மத்திய அரசு மீது தமிழக அரசு அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளது. மேலும், மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டமும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி தமிழகத்தின்  32 மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. இந்த உண்ணாவிரதத் போராட்டம் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது.

இதே போல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று  கடையடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.இதையோட்டி தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

இந்தப் போராட்டத்தில் தமிழகத்தில் இருக்கும் 300 இணைப்புச் சங்கங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான வணிகர்கள் பங்கேற்றுள்ளனர். அதே நேரத்தில்  பால், பத்திரிகை விநியோகம் மட்டும் இருக்கும் என வணிகர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 

இதேனிடையே மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.