சினிமா என்பது வியாபாரமும் தான், ஆனால் வாழைப்பழத்தை ஆண்குறிகளாக சித்தரித்து அதை கேவலமான பதிவோடு பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு செல்லும் நிலைக்கு வியாபாரம் வந்து நிற்பது வேதனை அடையச் செய்கிறது. இதற்காகவா இத்தனை ஜாம்பவான்கள் இந்த சினிமாவை கட்டமைத்தார்கள் என மனக்குமுறலை கொட்டித் தீர்த்திருக்கிறார் இயக்குனர் இமயம் பாரதிராஜா.

இந்த அளவிற்கு பாரதிராஜாவின் மனதை காயப்படுத்தி இருக்கிற படம்தான் இரண்டாம் குத்து திரைப்படம். இல்லை இல்லை ஆபாச படம். கலாச்சார சீர்கேடு என கூறும் நபர் நான் அல்ல ஆனால் என் வீட்டின் கண்ணியம் காக்கப்பட வேண்டும், கலைநயத்தோடு செய்யப்படும் எந்த படைப்பையும் ஆழ விழுந்து ரசிப்பவன் ஆனால் இரண்டாம் குத்து என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்களால் பார்க்கவே  கூசினேன் என ரத்தக்கண்ணீர் வடித்துள்ளார் பாரதிராஜா.

சினாமாவை கரைத்து குடித்து சிகரம் தொட்ட ஒரு இயக்குனர் இந்த அளவிற்கு வேதனையை கொட்ட என்னதான்  இருக்கிறது  அந்த ட்ரெய்லரில் என்று கவனித்தால்

அதில் முழுக்க முழுக்க வக்கிரமும், வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஆபாசமுமே நிறைந்துள்ளது. இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற சர்ச்சைக்குரிய படத்தில் தொடர்ச்சியாகவே வந்திருக்கிறது இரண்டாம் குத்து...

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் தான் இரண்டாம் குத்து படத்தையும் இயக்கியிருக்கிறார். அதுமட்டுமல்ல தன் வக்கிர  சிந்தனையை அடிபிறழாமல் அவரே அதில் நடித்து அதை படமுமாக்கி இருக்கிறார் சந்தோஷ் பி.ஜெயக்குமார். டேனியல் அன்னி போப், ரவி மரியா, மொட்ட ராஜேந்திரன், சதா கவர்ச்சியாக வலம் வரும் ஷாலு ஷம்மு உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். கரிஷ்மா அக்ரிதி சிங்,  மீனல் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

இருட்டு அறையில் முரட்டு குத்து டீசரையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு இரண்டாம் குத்து டீசரில் நடிகைகள் மப்பும் மந்தாரமுமாக  காம வெறியை கக்கியிருக்கிறார்கள். இந்த படம் தணிக்கை செய்யப்பட்டு எதிர்பார்த்தபடியே ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.முதல் பாகமான இருட்டு அறையில் முரட்டு குத்து படம் முழுக்க சிரிக்க வைக்கும் வசனங்கள் நிறைந்திருந்தன. இளைஞர்களை டார்கெட் செய்து எடுக்கப்பட்ட அந்த படம் வசூலைக் குவித்தது. இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகம் என்பதால் இந்த படத்திற்கு  சிம்பாலிக்காக இரண்டாம் குத்து என பெயர் வைத்துள்ளனர். 

ஒரு ஆபாச படம் எடுத்திருந்தால் கூட அதில் இந்த அளவிற்கு காம வெறியை தூண்டும்  காட்சிகள் இடம் பெற்றிருக்காது என்றுதான் சொல்ல வேண்டும்.  அந்த அந்த அளவில் இந்த படத்தின் காட்சிகள் வக்கிரம் நிறைந்தாக அமைந்துள்ளது. ஒரு ஆணுடன் அரைகுறை ஆடையுடன் ஒரு பெண் பேய் உடலுறவு கொள்வது போன்ற காட்சி காண்போரை காம பிசாசு பிடிக்க வைக்கிறது.

அதேபோல் வாழைப்பழத்தை ஆண்குறியை போல் சித்தரித்து அதை கதாநாயகி பயன்படுத்தும் காட்சிகள், " சரக்கா இருந்தாலும் கையா இருந்தாலும் அதை ஓவரா அடிச்சாதான் தப்பு''  என்று கதாநாயகி பேசும் வசனம், " அவர்கள் சொல்வதெல்லாம் குட்டிக்கதை ஆனால் நான் சொல்வது பல குட்டிகளை போட்டவரின் கதை என்று மொட்டை ராஜேந்திரன் பேசும் டபுள் மீனிங் டயலாக்"  காண்போரை முகம் சுளிக்க வைக்கிறது. தமிழ் திரைப்படங்கள் சாதி ஒழிப்பு, விதவைத் திருமணம், சமூக மாற்றம், அரசியல், கல்வி, பொருளாதாரம் என பல்வேறு விஷயங்கள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூக அக்கறையோடு உருவாக்கப்பட்டு வந்த நிலையில், வியாபார நோக்கோடு இருட்டு அறையில் முரட்டு குத்து, இரண்டாம் குத்து என அடுத்தடுத்து படங்கள் திரைக்கு வருவது, தமிழ் சமூகத்திற்கு, தமிழ் திரையுலகத்திற்கு சாபக்கேடு என்றே சொல்ல தோன்றுகிறது. 

விரசத்தை தூண்டும் இதுபோன்று படங்கள் இளம் தலைமுறையினரை தவறாக வழி நடத்தும் என்பதுடன், உளவியல் ரீதியாக வக்கிர புத்தியை உரம் போட்டு வளர்க்கும் என்பதுடன், பெண்ணை போகப் பொருளாகவே அனுகும் பொது புத்தியை விதைக்கும் ஒரு விஷ செடியே அன்றி வேறென்ன? தமிழ் சமூகத்தால் போற்றி புகழப்படும் இயக்குனர்களே இது போன்ற திரைப்படங்களின் ஆபத்தை ஆதங்கத்துடன் எச்சரிக்கும் நிலையில், இது போன்ற திரைப்படங்களை மக்கள் முன் வந்து புறக்கணிக்க வேண்டும். கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில்,  ஆர்வக்கோளாறு இயக்குனர்களின் நாற்றம் மெடுத்த ஆபாச வெறியை, அபத்த குப்பை கொட்டும் களமாக சினிமாத்துறை மாறி விட்டதோ என்ற கவலை மேலோங்குகிறது. உடனே இது போன்ற சமுதாய சீர்கேடு நிறைந்த திரைப்படங்களை தமிழக அரசும், தமிழக முதல்வரும் தலையிட்டு தடுக்க வேண்டும். திரை இயக்குனர் என்ற போர்வையில் வலம்வரும் வக்கிர புத்திகொண்ட மனநோயாளிகளை கண்டிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.