புரட்சிக் கலைஞர் என்று மக்களால்  அன்போடு அழைக்கப்படும் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு இன்று 68வது பிறந்த நாள். திரைப்பட கலைஞராக அறிமுகமாகி அரசியலில் அடியெடுத்து வைத்து எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்த  விஜயகாந்தின் பிறந்த தினத்தை அவரது ரசிகர்களும், திரை பிரபலங்கள் என பலரும்  அவருக்கு வாழ்த்துகூறி வருவதுடன், அவரது பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.

தனது நடிப்பால்,  ஏழை எளிய மக்களுக்கு உதவும் குணத்தால், மக்களை தன் அன்பால் கட்டிப் போட்டு வைத்துள்ளார் விஜயகாந்த் என்றால் அது மிகையல்ல, மக்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமந்த விஜயகாந்தை மக்கள் சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக அமர்த்தி அழகு பார்த்தனர் என்றால், அவருக்கும் மக்களுக்கும் இடையேயான பந்தம் அளவிட முடியாதது என்றே சொல்லலாம்.  இந்நிலையில் தனது 68வது பிறந்த தினத்தை கொண்டாடும் கருப்பு எம்ஜிஆருக்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கையின் வாயிலாகவும், தொலைபேசி மூலமாகவும் வாழ்த்துக் கூறி வருகின்றனர். அந்தவரிசையில் தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். 

 

அதில் கூறியிருப்பதாவது:- தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் திரு. விஜயகாந்த் அவர்கள் இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறார், திரைத் துறையில் சாதனை படைத்த புரட்சி கலைஞர் என்று பெயர் எடுத்தீர்கள்,  பின்னர் அரசியல் இயக்கத்தை தொடங்கி ஏழை எளிய மக்களுக்காகவும், தமிழக உரிமைகளுக்காகவும், இந்திய தேசத்தின் வளர்ச்சிக்காகவும், ஒற்றுமைக்காகவும் பாடுபட்டு வரும் தாங்கள் நூறாண்டு வாழ வாழ்த்துகிறேன். தங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை எனது சார்பிலும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் டெல்லியிலிருந்து திரு.விஜயகாந்த் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தேன் என அவர் அதில் கூறியுள்ளார். 

நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன், நீடூடி வாழ்ந்து தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டி உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதேபோல், விஜயகாந்த் அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன், பல்லாண்டு வாழ எனது உளம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை, அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விஜயகாந்த்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் வாழ்த்திய இருவருக்கும் விஜயகாந்த் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.