இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பிஜேபி நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. இன்று காலை  குண்டூரில் நடந்த கூட்டத்தில்  மோடி கலந்துகொண்டார். அதன்பிறகு திருப்பூர் கூட்டத்தில் பங்கேற்க விமானத்தில் 2.45 மணி அளவில் கோவை வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் பிஜேபி கூட்டம் நடைபெறும் திருப்பூர், பெருமாநல்லூர் பகுதிக்கு வந்தடைந்தார். அங்கு அவருடைய ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்காக சிறப்பு ஹெலிபேட் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது.

இதனிடையே மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகளும், இயக்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக  வைகோ தலைமையில் திருப்பூரில் இன்று கறுப்புக்கொடி போராட்டத்தில் மதிமுகவினர் ஈடுபட்டனர். காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுகவினரை கலந்துசெல்ல வலியுறுத்தியும், அவர்கள் கலைந்துசெல்ல மறுத்ததால் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.  அப்போது சுமார் 300க்கும் மேற்பட்ட மதிமுகவினர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

அதேபோல, திருப்பூர் ரயில் நிலையம் அருகேயுள்ள பெரியார் சிலை பகுதியில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டது. முன்னேறிய சமூகத்தினருக்கு கல்வி வேலைவாய்ப்பில் பொருளாதார ரீதியாக 10 விழுக்காடு இடஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மோடியின் தமிழக வருகையைக் கண்டித்து அவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட  கொளத்தூர் மணி, கு.ராமகிருஷ்ணன்,  திருமுருகன் காந்தி உள்ளிட்ட 700க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். மீண்டும் 3ஆவது முறையாக கோ பேக் மோடி ஹாஸ்டாக் இந்திய அளவில் இன்று ட்ரெண்ட் ஆனது. மோடியின் வருகையை ஆதரித்து மோடி ஆதரவாளர்களும் டிஎன் வெல்கம்ஸ் மோடி போன்ற ஹாஸ்டாக்குகளில் ட்ரெண்ட் ஆனது.