டிடிவி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றம் கழகத்திற்கு தமிழக மக்கள் வாக்களியுங்கள் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். பாஜகவில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து கொண்டு சுப்பிரமணியம் சுவாமி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் எங்கள் கட்சிக்கு ஓட்டு போட்டால் அதை செய்வோம், இதை செய்வோம் என வாக்குறுதியை வாரி இறைத்து வருகின்றனர். இந்த பிரச்சாரமும் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. 

இதனிடையே ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அதில் குறிப்பாக பாஜகவின் பல்வேறு நிலைப்பாடுகளுக்கு எதிராக சுப்பிரமணியன் சுவாமி கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில், வரும் 18-ம் நடைபெறும் மக்களவை தேர்தல், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தமிழக மக்கள் அனைவரும் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விஸ்வ ஹிந்து பரிஷித்தில் உள்ள ஒரு தேசியவாதியாக தமிழகத்தின் தற்போதைய நிலையை நான் ஆய்வு செய்து பார்த்துள்ளேன்.

 

அதில் தமிழகத்தில் உள்ள தேசியவாதிகள் தினகரன் தலைமையிலான அம்மா கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என விரும்புகிறேன். ஊழல் என எடுத்துக்கொண்டால் தமிழகத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளும் ஒன்று தான், இவர்களில் டிடிவி எவ்வளவோ பரவாயில்லை, நாட்டின் ஒற்றுமைக்காக நன்மை பயப்பார்" என குறிப்பிட்டுள்ளார். பாஜக கட்சியின் மூத்த தலைவர் தங்கள் கூட்டணிக்கு எதிராக செயல்படும் ஒருவருக்கு வாக்கு கேட்பது அக்கட்சி தொண்டர்களிடேயே பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.