தமிழகத்தில் ஜெயலலிதா முதலலமைச்சராக  இருந்தபோது, அமைச்சர்கள் வெளிநாடு சென்றதில்லை. வெளியூர் செல்ல வேண்டுமானாலும் ஜெயலலிதாவிடம் முன் அனுமதி பெற்றுத்தான் செல்ல வேண்டும். சென்னையில் இருந்து சொந்த ஊருக்கோ, தொகுதிக்கோ செல்ல வேண்டுமானால்கூட, முதலமைச்சர் அலுவலகத்தில் முன் அனுமதி பெற வேண்டும். ஆனால் தற்போது அது போன் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை.

அமைச்சர் ஜெயக்குமார், ஜப்பானுக்கும், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், ரஷ்யாவுக்கும் சென்று வந்தனர். தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவருடன் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோரும் சென்றுள்ளனர்.

இந்நிலையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இந்தோனேஷியாவுக்கும், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மொரிசியஸ் நாட்டுக்கும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்து நாட்டுக்கும் அரசு முறை பயணமாக சென்று வந்துள்ளனர். 

அதைத் தொடர்ந்து, இன்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றனர். சி.வி.சண்முகத்தின் அண்ணன் மகன் சமீபத்தில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவர் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வருவதால் அவரை பார்ப்பதற்காக தனிப்பட்ட பயணமாக சி.வி.சண்முகம் சென்றுள்ளார்.

தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் துபாய் வழியாக எகிப்து நாட்டுக்கு சென்றுள்ளார். இவர் தனிப்பட்ட பயணமாக குடும்பத்துடன் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அமைச்சர்கள் தொடர்ந்து அடுத்தடுத்து வெளிநாடு செல்வது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.