பிரசாந்த் கிஷோரால் தமிழகத்தில் திமுகவுக்கு வெற்றியைத் தேடித்தர முடியாது என்று தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். 
ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளையொட்டி மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே  உரப்பனூரில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தமிழக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது திமுக பிரசாந்த் கிஷோரை 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக நியமித்திருப்பதை குறை கூறினார். “வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற திமுக பிரசாந்த் கிஷோரை நாடியுள்ளது. இதுவே திமுக தனது தோல்வியை ஒப்புக்கொண்டதற்கு சமம். தமிழக மக்களுடைய உணர்வுகள், எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை திமுக உணராமல் வெற்றிக்காக பிரசாந்த் கிஷோரை நாடியுள்ளது.
பிரசாந்த் கிஷோரால் தமிழகத்தில் திமுகவுக்கு வெற்றியைத் தேடித்தர முடியாது. தமிழக மக்கள் உணர்வுள்ளவர்கள். ஒருமித்து எண்ணங்களை வெளிப்படுத்தி அதைப் பிரதிபலிக்கக் கூடியவர்கள். தமிழக அரசை முதல்வர், துணை முதல்வர் சிறப்பாக வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிமுகவில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்களின் அயராத உழைப்பால் மீண்டும் மக்கள் அதிமுகவுக்கு சாதகமான தீர்ப்பை வழங்குவார்கள்.” என்று உதயகுமார் தெரிவித்தார்.