கொங்கு மண்டலத்தின் தலைநகராக கோவை,  திருப்பூர்,  கரூர்,  போன்ற இடங்களில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமியில் சொந்த ஊரான காவேரிப்பட்டினம் பேரூராட்சியையும் திமுக கைப்பற்றியுள்ளது.

முழுசா நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்ற கதையாக மாறி இருக்கிறது அதிமுகவின் கதை. அதிமுகவின் வலுவான தலைவர்களாக கருதப்படும் ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ், எஸ் பி வேலுமணி, முனுசாமி என முன்னணி தலைவர்களில் ஏரியாவுக்குள் நுழைந்து திமுக கருப்பு சிவப்பு கொடியை பறக்க விட்டிருக்கிறார் ஸ்டாலின். வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே திமுக முன்னணியில் இருந்து வந்தது. தமிழகத்தில் உள்ள மொத்தம் 21 மாநகராட்சிகளிலும் திமுகவை கைப்பற்றியுள்ளது. ஒரு மாநகராட்சியை கூட அதிமுகவால் நெருங்க முடியவில்லை, என்ற பரிதாப நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது. 

போடியை பறிகொடுத்த பன்னீர்... ஓ பன்னீர்செல்வம் ஆகச் சிறந்த அரசியல்வாதி என்று சொல்லும் அளவிற்கு இல்லாவிட்டாலும், தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை எப்போதும் விட்டுக் கொடுத்து விடக் கூடாது என்பதில் குறியாக இருப்பவர் என்ற பெயர் அவருக்கு உண்டு, ஆனால் இந்த முறை அது எடுபடவில்லை, கடந்த சட்டமன்ற தேர்தலில் அவரே தோற்று விடுவார் என கூறப்பட்ட நிலையிலும் முட்டிமோதி எப்படோயோ வெற்றி பெற்று மீண்டும் சட்டமன்றத்திற்குள் நுழைந்தார் ஓபிஎஸ். அந்த வகையில்தான் இந்த முறையில் பெரியகுளம் நகராட்சியில் தன்னுடைய சொந்த தம்பி சண்முக சுந்தரத்தை களமிறக்கி இருந்தார் அவர். பல நூறு கோடிகளை செலவழித்து தன் மகனை தேனி எம்.பியாக்கிய அதே பார்முலாவை தனது தம்பிக்கும் பயன்படுத்தினார் ஓபிஎஸ். ஆனால் அது கை கொடுக்கவில்லை.

பெரியகுளம் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகளில் 20 வார்டுகளில் மட்டும் திமுக போட்டியிட்டது, மீதி வார்டுகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கி விட்டதால் அந்த வார்டுகளை குறிவைத்து பணியாற்றினால் வெற்றிபெற்று விடலாம் எனக்கருதி செயல்பட்டார் ஓபிஎஸ், கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் திமுக வெற்றி பெற்றாலும் தேனியை அதிமுக சொல்லி அடித்தது போல பெரியகுளத்தில் வெற்றியை பதிவு செய்து விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தார் ஓபிஎஸ், ஆனால் பெரியகுளம் நகராட்சியில் 30ல் 20க்கும் அதிகமான வார்டுகளை திமுக கைப்பற்றிவிட்டது. பலமுறை பெரியகுளம் நகராட்சித் தலைவர் பதவியை ஓபிஎஸ் அவரது தம்பி ஓ.பி ராஜவும் வென்றுள்ளனர். ஆனால் அவரின் இளையதம்பி சண்முகசுந்தரம் இந்தத் தேர்தலில் கவுன்சிலராக மட்டும் ஆகி இருக்கிறார் என்பது மட்டுமே ஓபிஎஸ்சுக்கு ஆறுதல்.

இதேபோல ஓபிஎஸ் சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கிற போடி தொகுதியிலும், போடிநாயக்கனூர் நகராட்சியையும் திமுகவே கைப்பற்றியுள்ளது. இதே நிலைமைதான் எடப்பாடி பழனிச்சாமி தொகுதியிலும் நடந்திருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியை தன் வசம் வைத்துள்ளார். எப்போதும் கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்ற மிதப்பில் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட கொங்கு தலைவர்கள் இருந்து வந்தனர், ஆனால் கொங்குவிலும் ஓட்டை போட்டு வெற்றியை பதிவு செய்திருக்கிறது திமுக. சேலம் மாநகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. எடப்பாடி நகராட்சியும் திமுக வசம் வந்துள்ளது. பழனிச்சாமி வீடு இருக்கிற வார்டில் திமுகவே வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறது.

கொங்கு மண்டலத்தின் தலைநகராக கோவை, திருப்பூர், கரூர், போன்ற இடங்களில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமியில் சொந்த ஊரான காவேரிப்பட்டினம் பேரூராட்சியையும் திமுக கைப்பற்றியுள்ளது. அதேபோல் எஸ்.பி வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், ஆர்.பி உதயகுமார், ராஜேந்திரபாலாஜி போன்றோரின் கட்டுப்பாட்டில் இருக்கிற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் திமுக கைப்பற்றியுள்ளது. இந்த தோல்வி அதிமுகவினரை கலக்கமடைய வைத்துள்ளது.