இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கையில், தமிழக அரசு செயல்பட்டால் 356 பயன்படுத்தி தமிழகத்தில் திமுக ஆட்சியை கலைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என சேலத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி அளித்துள்ளார்.

ஆட்சியை கலைத்து விடுவோம் :

சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் சேலம் வந்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ‘கோகுல்ராஜ் கொலை வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் ஒரு நக்சல். தீவிரவாத கும்பலை சேர்ந்தவர். அவரால் பலபேர் வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார். 

அல்-உம்மா தீவிரவாதிகளோடு வழக்கறிஞர் மோகனுக்கு தொடர்பு இருப்பதாகவும், பரபரப்பு குற்றம் சாட்டினார். தமிழகத்தில் கடந்த 9 மாதங்கள் ஆட்சியில், ஜாதி பிரச்சனை, மதவாதம், பயங்கரவாத மற்றும் இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கையில் தமிழக அரசு தொடர்ந்து ஈடுபடுவதாகவும், இந்த நிலை தொடர்ந்தால் 356 யை பயன்படுத்தி தமிழக அரசை கலைக்க, மத்திய அரசை வலியுறுத்துவோம். 

திராவிடத் திணிப்பு தொடர்ந்து இருக்குமானால், நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படைக் கொள்கையை அமல்படுத்த வலியுறுத்துவோம் என்றும் தெரிவித்தார். ஒன்றிய அரசு என மத்திய அரசை அழைப்பதை, திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என்று கூறினார்.