பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள பருவநிலை மாற்றம் குறித்து கவலைப்பட்டு கொண்டிருக்கும் உலக நாடுகள், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் மாற்றுத் திட்டம் குறித்து சிந்தித்து வருகிறது. அணு உலைகளையும், எண்ணெய் கிணறுகளையும், நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களையும் அவ்வப்போது மூடி வரும் உலக நாடுகள், சூரிய மின் உற்பத்தி, காற்றாலை மின் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது. 

புதியதாக ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கக் கூடாது என்றும் ஏற்கனவே உள்ள ஹைட்ரோ கார்பன் கிணறுகளை மூட வேண்டும் எற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு.தி. வேல்முருகன் தெரிவித்துள்ளார். 

பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள பருவநிலை மாற்றம் குறித்து கவலைப்பட்டு கொண்டிருக்கும் உலக நாடுகள், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் மாற்றுத் திட்டம் குறித்து சிந்தித்து வருகிறது. அணு உலைகளையும், எண்ணெய் கிணறுகளையும், நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களையும் அவ்வப்போது மூடி வரும் உலக நாடுகள், சூரிய மின் உற்பத்தி, காற்றாலை மின் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது. இந்த நிலையில், 9 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைப்பதற்காக சுற்றுச்சூழல் அனுமதியை மேலும் நீட்டிக்கக்கோரி ஒ.என்.ஜி.சி. நிறுவனம் ஒன்றிய அரசிடம் விண்ணப்பித்துள்ளது. அதாவது, காவிரிப் படுகையில், 30 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைப்பதற்காக ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் துறையானது கடந்த 2015ம் ஆண்டில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியிருந்தது.

அனுமதி பெறப்பட்ட 30 கிணறுகளில் 21 கிணறுகள் தற்போது வரை அமைக்கப்பட்டுள்ள நிலையில், 9 கிணறுகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. இச்சூழலில், சுற்றுச்சூழல் அனுமதியின் கால அவகாசம் விரைவில் முடிவடையவுள்ளதால், மீதமுள்ள 9 கிணறுகளை அமைப்பதற்காக சுற்றுச்சூழல் அனுமதியை மேலும் நீட்டிக்கக்கோரி ஒ.என்.ஜி.சி. நிறுவனம் ஒன்றிய அரசிடம் விண்ணப்பித்துள்ளது. ஓ.என்.ஜி.சியின் விண்ணப்பத்தை பரிசீலித்த சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு, 2025ம் ஆண்டு வரைக்கும் சுற்றுச்சூழல் அனுமதியை நீட்டிக்கலாம் என ஒன்றிய அரசிற்கு பரிந்துரை செய்துள்ளது. இதன் காரணமாக, விரைவில் காவிரி டெல்டாவில் மேலும் 9 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் பணி தொடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசு கடந்த 2020ம் ஆண்டே காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டம் இயற்றியுள்ளது. இந்தச் சட்டத்தால் புதிதாக அனுமதி பெற்று எந்த ஹைட்ரோகார்பன் கிணறுகளையும் அமைக்க முடியாது. ஆனால், ஏற்கனவே அனுமதி பெறப்பட்ட கிணறுகள் தொடர்ந்து இயங்குவதை இச்சட்டம் கட்டுப்படுத்தாது. இருப்பினும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் எங்கும் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் காவிரி டெல்டா விவசாயிகளை கண்ணை இமை காப்பதுபோல காப்போம் என்றும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, ஹைட்ரோகார்பன் கிணறுகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தலைமையிலான நிபுணர் குழுவும் அரசிடம் அண்மையில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. 

இந்த நிலையில், புதிய கிணறுகளை தமிழ்நாட்டில் அமைப்பதற்கு ஒ.என்.ஜி.சி. முயல்வது கடும் கண்டிக்கதக்கது. எனவே, காவிரி டெல்டாவின் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு காவிரி டெல்டாவில் மேற்கொண்டு ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க முயலும் ஓ.என்.ஜி.சியின் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும். பருவநிலை மாற்றம் குறித்து உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதிக்கும் அணு உலைகள், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு முடிவு கட்ட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.