நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு குறட்டை விட்டு தூங்கி கொண்டிருப்பதாக திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவ கல்வியில் சேருவதற்கான நீட் தேர்வு விவகாரத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக அரசு குறட்டை விட்டு தூங்கி கொண்டிருப்பதாகவும், கடிதம் எழுதி விட்டால் கடமை முடிந்து விட்டதாக எடப்பாடி நினைக்கிறார் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றியும் தமிழக அரசால் சட்டமாக்கமுடியவில்லை என்றும், இதனால் மருத்துவ மேற்படிப்பில் சேரவேண்டிய மருத்துவர்கள் வீதிக்கு வந்து போராட வேண்டிய நிலைமை தொடர்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.  

தரமான சிகிச்சையை வழங்கவேண்டிய பொறுப்பில் இருக்கும் தமிழக அரசு இவ்வாறு அலட்சிய போக்கில் இருப்பது வேதனை அளிக்கிறது.

ஆகவே அதிமுக அரசு இதுகுறித்து மேல்முறையீடு செய்து உடனடியாக மருத்துவ மேற்படிப்புக்கு அரசு மருத்துவர்களை சேர்க்கவும், அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் 50 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசு மருத்துவர்களின் போராட்டத்தில் முழு கவனம் செலுத்தி அவர்களுக்கு உதவிட அரசு முன்வர வேண்டும் என தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.