பாஜகவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பிறகு தற்போது அதிகாரமிக்க நபராகியுள்ள ஜே.பி. நட்டாவையும் ஓபிஎஸ் நெருங்கியிருப்பது எடப்பாடி தரப்புக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவை பொறுத்தவரை டெல்லி பாஜகவிடம் யார் நெருக்கமாக இருக்கிறார்களோ அவர்கள் தான் அதிகாரமிக்கவர்கள் என்று கருதப்படுகிறது. அந்த வகையில் பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நெருக்கமாக இருந்து வருகிறார். மோடியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் மிகுந்த அன்பை செலுத்தி வருகிறார். எடப்பாடி கேட்கும் போதெல்லாம் தவறாமல் மோடி அப்பாய்ன்மென்ட் கொடுத்துவிடுகிறார். 

இதனால் தான் ஓபிஎஸ் தரப்பு கொடுக்கும் நெருக்கடிகளை எல்லாம் சமாளித்து எடப்பாடியால் தமிழகத்தில் முதலமைச்சர் பதவியில் இருந்து அசராமல் செயல்பட முடிகிறது. அதே சமயம் அமித் ஷா மனம் கவர்ந்தவராக ஓபிஎஸ் இருந்து வருகிறார். கடந்த முறை எடப்பாடி டெல்லி சென்ற போது கடைசியாகத்தான் அமித் ஷாவை பார்க்க முடிந்தது. ஆனால் நேற்று காலையில் டெல்லி சென்ற ஓபிஎஸ் உடனடியாக அமித் ஷாவை சந்தித்து பேசினார்.

 

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அமித் ஷாவின் அலுவலகத்தில் இருந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி. நட்டாவை ஓபிஎஸ்க்கு அமித் ஷா அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதன் மூலம் பாஜகவின் அடுத்த அதிகார மையத்தில் எடப்பாடிக்கு முன்னதாகவே ஓபிஎஸ் அங்கமாகிவிட்டார் என்கிறார்கள்.

மேலும் தமிழகம், தெலுங்கானா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் விரைவில் நட்டா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில் ஓபிஎஸ் உடனான நட்டா சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சந்திப்பின் போது தமிழக அரசியல் நிலவரம், திமுகவின் எழுச்சி உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் வேலூர் தேர்தலில் ஏசி சண்முகம் எளிதாக வென்றுவிடுவார் என்றும் அதற்கு பார்க்கப்பட்ட வேலைகளை ஓபிஎஸ் எடுத்துரைத்ததாகவும் சொல்கிறார்கள். 

இதனிடையே ஓபிஎஸ்சுக்கு தனிப்பட்ட முறையில் அமித் ஷாவும் – நட்டாவும் சில அசைன்மென்ட் கொடுத்துள்ளதாகவும் அது தமிழகம் கடந்து கேரளா, தெலுங்கானா தொடர்புடையது என்றும் இதை மட்டும் ஓபிஎஸ் சரியாக முடித்துவிட்டால் விரைவில் முதலமைச்சர் ஆகிவிடுவார் என்றும் கூறுகிறார்கள்.