தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் வேண்டும் ... மத்திய சுகாதாரத்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்...!
பிற மாநிலங்களைப் போலவே தமிழகத்திற்கும் கூடுதலாக தடுப்பூசி வழங்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா தொற்றை எதிர்த்து போராட தடுப்பூசி செலுத்திக் கொள்வது ஒன்றே சரியான வழி என்பதால் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வருகின்றனர். இதுவரை 44 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்த தமிழக அரசு முடிவு செய்தது. இந்த திட்டத்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர், தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தடுப்பூசி போட்டு கொள்ள ஆர்வம் காட்டி வந்தனர்.
இதற்கிடையே தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து, மத்திய அரசிடம் இருந்து தேவையான தடுப்பூசிகள் முழுமையாக வரவில்லை என்றும், தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று புனேவில் இருந்து 52 பெட்டிகளில் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன. அதில் 36 பெட்டிகளில் இருந்த 4 லட்சத்து 20 ஆயிரத்து 570 தடுப்பூசிகள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழக மருத்துவ கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து நேற்றிரவே மருந்துகள் அனைத்தும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.
தற்போது கைவசம் இருக்கும் கொரோனா தடுப்பூசியைக் கொண்டு 3 நாட்கள் வரை சமாளிக்க முடியும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் பிற மாநிலங்களைப் போலவே தமிழகத்திற்கும் கூடுதலாக தடுப்பூசி வழங்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழக மக்கள் தொகை மற்றும் கொரோனா பாதிப்புக்கு ஏற்றார் போல் கூடுதல் தடுப்பூசிகளை விரைந்து வழங்க வேண்டும் என்றும், செங்கல்பட்டிலுள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார்.