ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், நளினி ஆகிய எழுவரும் 30 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். கடந்த 2014-இல் முதல்வராக இருந்த ஜெயலலிதா, எழுவரையும் விடுதலை செய்ய நடவடிக்கை செய்தார். ஆனால், மத்திய அரசு நீதிமன்றம் சென்றதால், அது தாமதமானது. இதுதொடர்பான வழக்கில், எழுவர் விடுதலை குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து 2018 செப்டம்பரில் 7 பேரையும் விடுதலை செய்ய அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூடி, எழுவரை விடுவிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அந்தத் தீர்மானத்தின் மீது நீண்ட நாட்களாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதொடர்பாக தொடரப்பட்டவழக்கில், எழுவரை விடுவிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்குதான் உண்டு என்று நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாறியுள்ள சூழலில், எழுவரையும் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழத் தொடங்கியுள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. இதுதொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினை வலியுறுத்தினார். எழுவர் விடுதலையில் திமுகவும் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த கட்சிதான். எனவே, திமுக ஆட்சியில் உறுதியான முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இதுதொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆகியோருடன் ஆலோசித்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. எழுவர் விடுதலை விவகாரத்தில் உள்ள சிக்கல்கள், ஆளுநர் தாமதம் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
