தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுமார் 2 வார காலம் இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார்.
தமிழகத்தில் இரண்டு முறை உலக முதலீட்டாளர் மாநாடுகளை தமிழக அரசு நடத்தியது. வெளிநாடுகளுக்குச் சென்று நேரடியாக முதலீட்டாளர்களைச் சந்திப்பதன் மூலம் முதலீடுகளை இன்னும் அதிகளவில் ஈர்க்க முடியும் என்ற அடிப்படையில் தமிழக முதலர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடுகளுக்கு செல்ல முடிவு செய்தார். தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், வெளிநாடுகளில் உள்ள வேளாண் தொழில்நுட்பங்கள் பற்றி அறிந்துகொள்ளவும் இந்தச் சுற்றுப்பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 13 நாட்களுக்கு வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செல்லும் முதல்வர், வரும் 28-ம் தேதி சென்னையிலிருந்து புறப்படுகிறார். 
அதன்படி முதல் பயணமாக இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு முதல்வர் செல்கிறார். லண்டனில் 29 அன்று சுகாதார துறை சம்பந்தமான முதலீட்டாளர்களைச் சந்தித்து பேசுகிறார். பிறகு கிளாஸ்கோவில் எரிசக்தி துறை முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்க இருக்கிறார். செப்டம்பர் 1 அன்று லண்டனிலிருந்து எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா செல்கிறார். அமெரிக்காவில் பப்பலோ நகரில் நடைபெறும் கால்நடை தொழில் அபிவிருத்தி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் நியூயார்க்கில் நடைபெறும் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார். அங்குள்ள தமிழக முதலீட்டாளர்கள் நடத்தும் கூட்டத்திலும் முதல்வர் பங்கேற்கிறார். 
சான் பிரான்சிஸ்கோ நகரில் முதலீட்டாளர்களைச் சந்திக்கும் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கிறார். தெல்சா நகரில் உள்ள தொழிற்சாலைகள், பிரபலமான கால்நடை பண்ணையையும் முதல்வர் பார்வையிடுகிறார். இந்தப் பயணங்களை முடித்துகொண்டு செப்டம்பர் 7 அன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து புறப்பட்டு 9-ம் தேதி அதிகாலை சென்னை வந்தடைகிறார். முதல்வருடன் அமைச்சர்கள் விஜயபாஸ்கர்,  எம்.சி. சம்பத், உதயகுமார், ராஜேந்திர பாலாஜி மற்றும் துறை சார்ந்த செயலாளர்களும் செல்கிறார்கள்.