உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள பாஜக, இரண்டு மேயர் சீட்டுகளை எதிர்பார்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
தமிழகத்தில் டிசம்பர் மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று தமிழக அரசு கூறிவருகிறது. உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக கூட்டணி கட்சிகளுடன் உள்ளாட்சி இடங்கள் உடன்பாடு குறித்து ஆலோசிக்க கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் கூட்டத்துக்கு அதிமுக  தலைமை டிசம்பர் 6 அன்று ஏற்பாடு செய்துள்ளது.


இந்நிலையில் அதிமுக கூட்டணி கட்சியான பாஜக உள்ளாட்சித் தேர்தலை அதிமுகவுடன் இணைந்து சந்திக்க தயாராகிவருகிறது. இந்த முறை 2 மேயர் பொறுப்புகள் உள்பட கணிசமான கவுன்சிலர்கள், நகராட்சிகள், பஞ்சாயத்துகளில் போட்டியிட அக்கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக அதிமுக தலைமையிடம் பேசி கூடுதல் இடங்களைப் பெறுவதில் பாஜக மாநில தலைவர்கள் ஆர்வம் காட்டிவருகிறார்கள். மேலும் தேர்தலில் புதியவர்களையும் இளைஞர்களையும்  களமிறக்கி வெற்றி பெற பாஜக வியூகம் வகுத்துவருகிறது.

 
ஆனால், தமிழகத்தில் பாஜகவுக்கென வாக்கு வங்கி புள்ளிவிவரங்கள் மோசமாக இருப்பதால், பாஜக எதிர்பார்க்கும் இடங்களை அதிமுக வழங்குமா என்பதில் சந்தேகம் நிலவிவருகிறது. நாடாளுமன்றத் தேர்தலிலேயே 7 முதல் 10 தொகுதிகளை பாஜக எதிர்பார்த்தது. ஆனால், கூட்டணியில் உள்ள கட்சிகள், பாஜகவின் வாக்கு வங்கி போன்ற அம்சங்களை ஆராய்ந்து அதிமுக தலைமை 5 இடங்களை மட்டுமே வழங்கியது. இப்போதும் மேயர் இடங்கள் உள்பட முக்கியமான நகராட்சிகள், பஞ்சாயத்துகளை கூட்டணி கட்சிகளுடன் பகிர மாட்டோம் என்று அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது. என்றபோதும் 2 மேயர் உள்ளிட்ட இடங்களைக் கேட்க தமிழக பாஜக தயாராகிவருகிறது.
உள்ளாட்சித் தேர்தல் மூலம் கட்சியை வலுப்படுத்தவும் பாஜக திட்டமிட்டுள்ளது. எனவே புதியவர்களை களமிறக்கும் முயற்சிகளிலும் அக்கட்சி ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து பாஜக வட்டாரங்களில் விசாரித்தபோது, “தமிழக உள்ளாட்சித் தேர்தலை துடிப்பான இளைஞர்கள், ஆர்வமுள்ள தொண்டர்களைக் கொண்டு எதிர்கொள்ள முடிவு செய்துள்ளோம். அதேபோல ஆர்வமுள்ள தொண்டர்களையும் தேர்தலில் களமிறக்குவோம்.  சரியான வேட்பாளர்களைக் களமிறக்கும் வகையில் மாநில தலைவர்கள் அடங்கிய குழுவை அமைத்து அந்தப் பணிகளை மேற்கொள்ள உள்ளோம். இன்னும் சில தினங்களில் இதற்கான குழு அமைக்கப்படும்” என்று தெரிவித்தன.
அதிமுக கூட்டணியில் முக்கிய கூட்டணி கட்சியாக பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் உள்ளன. உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை சதவீத இடங்கள் கிடைக்கும் என்பது தெரிந்துவிடும்.