தமிழக பாஜக தலைவர் பதவி கிடைத்தால் தான் சிறப்பாக பணியாற்றுவேன் என்று எஸ்.வி.சேகர் கூறியதற்கு, சிரிப்பு நாடகத்தில் பேசுவதாக நினைத்து எஸ்.வி.சேகர் பேசியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் வழிபாடு நடத்தினார். இதன் பிறகு, அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, பாஜக தலைமை என்னை பயன்படுத்திக் கொள்ளவில்லை... என்னை பயன்படுத்திக் கொண்டால் கட்சிக்கு நல்லது. கட்சி என்னை பயன்படுத்திக் கொள்ளா விட்டால் எனக்கு ஒரு நஷ்டமும் இல்லை. 

இதற்காக நான் தமிழிசை வீட்டு வாசலில் போய் நிற்க வேண்டுமா? எல்லோரும் அவரை அக்கா என்கிறார்கள். அவர் என்னை விட வயதில் குறைந்தவர். எனக்கு அவர் தங்கை மாதிரி. தமிழக பாஜகவுக்கு தலைமையேற்கும் வாய்ப்பு கிடைத்தால் அதை ஏற்க தயாராக இருக்கிறேன். அப்படி ஏற்றால் கட்சியை பலமாக்குவேன். இப்போதுள்ளதை விட வாக்கு வங்கியைவிட அதிகளவில் வாக்கு வங்கியை உருவாக்குவேன் என்று கூறியிருந்தார். 

 

எஸ்.வி.சேகரின் இந்த பேச்சு குறித்து, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, இதற்கு பதில் சொல்றத விட சிரிச்சுட்டு விட்டுறலாம். ஏனென்றால், பல சிரிப்பு நாடகங்களில் நடித்து நடித்து அதே மாதிரி ஒரு நாடகத்தில் பேசுகிறோம் என்று நினைத்து பேசியிருப்பாரோ என்னவோ? என்றும், தமிழக பாஜக தலைவர்  பதவி என்றால் அவ்வளவு இலகுவான விஷயமா? என்றும் அவர் கூறினார். 

ஒரு கூட்டுக் குடும்பமாக இருந்த தமிழக பாஜாகவில், தற்போது கோஷ்டி மோதல் உருவாகி உள்ளது. எஸ்.வி.சேகர் ஏதாவது தவறாக பேசினால் அவருக்கு ஹெச்.ராஜா உதவுவார். ஹெச்.ராஜா தவறாக பேசினால் அவரை தமிழிசை காப்பாற்றுவார். தமிழிசை பேசினால் அவருக்கு இரண்டு பேரும் சேர்ந்து காப்பாற்றுவார்கள். ஆனால் இப்போதோ அந்த ஒற்றுமையில் விரிசல் விழுந்துள்ளது. எந்த "ஆண்டி இந்தியனின்" கண்பட்டதோ தெரியவில்லை. இந்த அழகான கூட்டுக்குள் இப்போது பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.