வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவதுதான் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

காவிரி நதிநீர் உரிமையை வென்றடுக்கும் வரை கேளிக்கைகள் வேண்டாம் என்ற முழக்கங்களுடன் ஐபிஎல் போட்டிக்கு எதிராக நேற்று சென்னை அண்ணாசாலை,
வாலாஜா சாலை சேப்பாக்கம் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கனோர் சென்னையையே அதிர வைத்தனர்.

காவிரி  மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து  தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினா் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். தமிழக விவசாயிகளின் போராட்டத்தை கண்டு கொள்ளாத மத்திய அரசுக்கு தங்கள்  எதிர்பார்ப்பை வெளிப்படுத்த இளைஞா்கள் ஐ.பி.எல். போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினா் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் கிரிக்கெட் வாரியம் அதை கண்டுகொள்ளாமல் காவல்துறையை இறக்கி இந்த போட்டியை நடத்தியது.

திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, தலைமையில் சீமான், கௌதமன், தங்கர்பச்சான், வைரமுத்து, வெற்றிமாறன், ராம் உள்ளிட்டோர் நேற்று மாலை அண்ணா சாலையில் மறியல் ஈடுபட்டனர். அவர்களுடன் பல்லாயிரக்காண பொதுமக்களும் போராட்டத்தில் களமிறங்கினர்.

இதனால் அண்ணாசாலை பகுதி போராட்டக்களமானது. 3 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து முடக்கப்பட்டது. போலீசார் தடியடி நடத்தினர். இதன் பின்னர்,
பாரதிராஜா, சீமான், கௌதமன் உள்ளிட்ட பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

போராட்டக்காரர்கள், போலீசாரின் தடுப்புகளை மீறி, மைதானத்தை நோக்கி செல்ல முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர் ஒருவர், போலீசாரை தாக்கியுள்ளார். 

போராட்டக்காரர்கள் போலீசாரை தாக்கியதற்கு நடிகர் ரஜினிகாந்த், வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவததான் என்றும்,
இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து என்றும் கூறியுள்ளார்.

சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்கள் தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்ற வேண்டும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பொதுமக்களை போலீசார் கொடூரமாக தாக்கியபோது நீங்கள் என்ன செய்து
கொண்டிருந்தீர்கள் என்று நெட்டிசன்கள் பலவாறு கிண்டலடித்துள்ளனர்.

வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவதுதான் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளதற்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஆதரவு தெரிவித்து டுவிட்டர் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், பொது மக்களைப் பாதிக்கும் அறவிற்கு சட்டம் ஒழுங்கை பாதிக்கும் அளவுக்கும் நடந்து கொள்ளும் வன்முறையாளர்களை எதிர்த்திருப்பது சரியானதே என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.