மருத்துவப் படிப்புகளில் இதர பிறப்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க 3 பேர் குழுவை அமைத்து மூன்று மாதங்களுக்குள் மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக பாஜக உச்ச நீதிமன்றம் செல்லக்கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த வேண்டும் என்றும் தமிழக எதிர்க்கட்சிகள் கோரிவருகின்றன. இந்த விவகாரத்தில் பாஜக - திமுக இடையே வார்த்தைப்போர் வெடித்துவருகின்றன. இடஒதுக்கீடுக்கு யார் எதிரி என்ற வகையில் இந்த விமர்சனங்கள் சென்றுகொண்டிருக்கின்றன.
இந்நிலையில் திமுகவை விமர்சித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “2014ம் ஆண்டு வரை எந்த வழக்கும் எந்த தடையும் இல்லாத நிலையில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு குறித்து வாய் மூடி மௌனமாக இருந்தது ஏன்?
இதர பிறபடுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு விஷயத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் செய்த  துரோகம் வெளிவந்துவிடும் என்ற எண்ணத்தில் தற்போது பிதற்றிக்கொண்டிருக்கிறார்கள். திமுகவும் அதன் தலைவர் ஸ்டாலினும் மக்களிடம் தவறான பொய்ப் பிரச்சாரம் செய்வதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று அதில் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.