திமுக எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்க முடியாது என்பதால் ஆட்சியை கலைக்க முயற்சி.! பாஜகவை விளாசும் டிகேஎஸ்
மத்திய அரசு மற்றும் ஆளுநரின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டியே ஆட்சியே போனாலும் கவலை இல்லை பா.ஜ.க வை எதிர்ப்போம் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாக திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் கவலை இல்லை
சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசுகையில், சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காகவே எதிர்கட்சிகள் ஆலோசனை நடத்தி பாஜகவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், எதிர்கட்சிகளின் அடுத்த கூட்டம் பெங்களூரில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார். \ இதையெல்லாம் பார்த்து எரிச்சல்படும் பிரதமர், பிரதமர் என்ற நிலையை மறந்து ஏதேதோ பேசுகிறார் உளறுகிறார் என விமர்சித்தார். மேலும் பா.ஜ.க அரசை அப்புறப்படுத்தும் முயற்சியில், எந்த சூழ்நிலை வந்தாலும், ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் இம்மியளவும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியிருந்தார்.
ஆட்சிக்காக எதை வேண்டும் என்றாலும் செய்வார்கள்
தமிழக முதலமைச்சரின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்கிறார்கள். அரசியலமைப்புச் சட்டத்தையும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளையும் புறக்கணிக்க துணிந்தவர்களாகவும் கோடிக்கணக்கில் பணத்தை செலவழித்தாவது ஆட்சியை பெறவேண்டும் என்று நினைப்பவர்கள், ஆட்சியைப் பெற வேண்டும் என்றால் எதை வேண்டுமானாலும் செய்வார்கள் அதனை சுட்டிக்காட்டி தான் தமிழ்நாடு முதல்வர் பேசியதாக தெரிவித்தார்.
ஆட்சியை கலைக்க முயற்சி
திமுகவை பொறுத்தவரை எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்க முடியாது என்பதால் ஆட்சியை கலைக்க முற்படுகிறார்கள். ஆளுநர் அரசியல் அமைப்பு சட்டத்தின் உள்ளபடி அவருடைய மரியாதையை காப்பாற்றிக் கொள்ளாமல் பாஜக, ஆர் எஸ் எஸ் அடியவர்களாக பேசிக் கொண்டிருக்கிறார், தமிழ்நாடு ஆளுநர் ஆளுநராக செயல்படவில்லை ஆர்எஸ்எஸ் தொண்டனாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் எனவும் விமர்சித்தார். மகளிர் உரிமைத் தொகை வழிகாட்டு நெறிமுறைகள் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர், எதற்கெடுத்தாலும் விமர்சனம் கொடுப்பார்கள். எந்த நலத்திட்டமாக இருந்தாலும் தகுதி உடையவர்களுக்கு தான் போய் சேர வேண்டும் என டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்