நாற்பதை விட பதினெட்டு சின்னதுதானே! அந்த லாஜிக்கின் படி ஒட்டு மொத்த அரசியல் கண்களும், மீடியாவின் கண்களும், பத்திரிக்கைகளின் கவனமும் தமிழகம் மற்றும் புதுவையில் நாற்பது நாடாளுமன்ற தொகுதிகளின் மேல்தான் இருக்கின்றன.

தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கின்ற ஆட்சியின் தலையெழுத்தை மாற்றினாலும் மாற்றும் வாய்ப்பு இருக்கின்ற பதினெட்டு தொகுதி இடைத்தேர்தல் பற்றி யாருமே அலட்டிக் கொள்வதில்லை. இது அந்த வேட்பாளர்களுக்கே கடுப்பாய் இருக்கும் நிலையில், இதோ திருவாய் மலர்ந்திருக்கிறார் தி.மு.க.வின் பொருளாளரான துரைமுருகன். 

அரக்கோணத்தில் கழகத்தின் ஏழை எளிய வேட்பாளரான ஜெகத் ரட்சகனுக்காக மைக் பிடித்தவர்...”ஏதோ அஞ்சு வருஷத்துக்கு ஒரு தபா நாடாளுமன்ற தேர்தல் வருது, அது மாதிரி இப்பவும் வருது, என்னத்தயோ ஓட்டு போடுவோமுன்னு நினைக்க கூடிய தேர்தல் இல்லை இந்த முறை. பாசிச  மோடியின் ஆட்சியையும், அவருக்கு அடிமைசாசனம் செய்கின்ற எடப்பாடியாரின் ஆட்சியையும் தூக்கி எறிகின்ற தேர்தல் இது. நல்லா கவனிச்சுக்குங்க, இந்த தேர்தலுக்கு பிறகு இவங்க ரெண்டு பேருமே அவங்க இப்போ உட்கார்ந்திருக்கிற சீட்ல இருக்கமாட்டாங்க. 

எடப்பாடியார் என்னமோ கணக்கு போடுறார், பதினெட்டு தொகுதியிலும் ஜெயிச்சு, பெரும்பான்மையை காப்பாற்றி ஆளலாமுன்னு. ஆனால் ஒரு உண்மையை சொல்லவா! அந்த கட்சி மிக மோசமா இடைத்தேர்தலில் தோற்று, ஆட்சியை இழக்கப்போவது உறுதி. ஒருவேளை பதினெட்டு பேர் அவங்க வேட்பாளர்களே வெற்றி பெற்றாலும் கூட, அதில் பதினைந்து பேர் நம்ம பக்கம் ஓடி வந்துடுவாங்க. தி.மு.க. கூட்டணி பலம் பெறும்! எனவே நிச்சயமாக தேசத்தில் மட்டுமல்ல மாநிலத்தில் அரசு தலைமையில் மாற்றம் உறுதி. ஜனநாயகம் இந்த இரண்டு இடங்களிலும் மீண்டும் தலையெடுக்கும். ” என்றார். 

இதைப் பற்றி கமெண்ட் அடிக்கும் தி.மு.க.வின் சீனியர் நிர்வாகி...”ஏதோ கனவுல மிதக்குற துரைமுருகன், வாய்க்கு வந்ததை பேசி வைக்கிறார். இதெல்லாம் பலிக்கிற காரியமா?

வேலூர் மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சிக்காக பணத்தையும், உடலுழைப்பையும் கரைத்து தேய்ந்தவங்க பல பேர் இருக்கிறாங்க. ஆனால், கட்சி தந்த பதவிகளில் சம்பாதித்த பணத்தில் கட்டிய கல்லூரியின் ஏஸி அறையிலிருந்து வெளியே வராத தன் மகன் கதிர் ஆனந்துக்காக தளபதியிடம் மடங்கி, மடங்கி, ஒடுங்கி நின்று சீட் வாங்கியிருக்கிறார் துரை. 

இவரெல்லாம் அரசியலில் ஜனநாயகத்தைப் பற்றி பேசுறது வெட்கக்கேடு! இந்த மாதிரி பேர்வழிகளை தலைமுறையாக தங்களோட நிழலில் வைத்திருந்து கோலோச்ச விடுற தலைமையின் குணம்தான் எங்கள் கட்சியின் பெரிய சாபக்கேடு!” என்றார். 
நிதர்சனம்!