தலைமை செயலகம் செல்லும் முதல்வர் ஓபிஎஸ் காரை மறிக்க அதிமுகவினர் முயற்சிக்கும் தகவல் வெளியானதால் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் அதிர்ச்சி அடைந்து கமிஷனரை அழைத்து பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆலோசித்து எச்சரித்தாக தகவல் வெளியாகியுள்ளது .
முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமைசெயலகத்துக்கு செல்வதாக நேற்று பேட்டி அளித்திருந்தார். 6 நாட்களுக்கு பிறகு பரபரப்பான சூழ்நிலையில் முதன் முறையாக சட்டசபை செல்கிறார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
கடந்த 6 நாட்களாக வீட்டில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்த்தி வரும் ஓ.பன்னீர்செல்வம் , இன்று தலைமை செயலகம் சென்று வழக்கமான தனது பணியை கவனிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவர் காலை 10 மணி அளவில் கிளம்பும் போது அவருக்கு வழியெங்கும் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து பூசணிக்காய் , தேங்காய் உடைத்து வழியனுப்ப உள்ளதாகவும் முடிவு செய்துள்ளதாக கிரீன்வேஸ் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அவர் தலைமை செயலகம் செல்வதை ஏற்றுகொள்ளாத ஒரு பிரிவினர் அவர் செல்லும் வழியெங்கும் பல இடங்களில் அவரது காரை வழி மறிக்க முடிவு செய்துள்ளனர்.

இது பற்றிய ரகசிய தகவலை உளவுத்துறை திரட்டியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிஜிபி டி.கே.ராஜேந்திரன் கமிஷனர் ஜார்ஜை அவசர அவசரமாக அழைத்து ஆலோசனை நடத்தினார்.
முதல்வர் செல்லும் போது அவர் பாதுகாப்பு முக்கியம் , அவரது வாகனத்தை மறித்தால் அது பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி விடும் ஆகவே பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துங்கள் என உத்தரவிட்டுள்ளார்.
